மோசமான வானிலையால் கோவை சென்ற விமானம் மீண்டும் சென்னை திரும்பியது - 119 பயணிகள் அவதி
சென்னையில் இருந்து கோவை சென்ற விமானம், அங்கு மோசமான வானிலையால் தரை இறங்க முடியாமல் மீ்ண்டும் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டது. இதனால் 119 பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து கோவைக்கு நேற்று மதியம் 2.40 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 119 பேர் பயணம் செய்தனர்.
கோவை அருகே விமானம் சென்றபோது, அங்கு பலத்த சூறை காற்று வீசியது. இதனால் கோவை விமான நிலையத்தில் விமானம் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தது.
மோசமான வானிலை காரணமாக கோவையில் தரை இறங்க முடியாததால் மீண்டும் அந்த விமானம் சென்னைக்கே திருப்பி விடப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் மாலை 4.45 மணிக்கு அந்த விமானம் தரை இறங்கியது.
பின்னர் விமானத்துக்கு தேவையான எரிபொருளை நிரப்பினர். சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு கோவையில் வானிலை சீரானதால் அந்த விமானம் மீண்டும் கோவைக்கு புறப்பட்டு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த விமானத்தில் இருந்த 119 பயணிகளும் கடும் அவதிக்குள்ளானார்கள்.