பண்ருட்டி அருகே நெகிழ்ச்சி சம்பவம்:தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய எஸ்எஸ்எல்சி மாணவன்

பண்ருட்டி அருகே தந்தை இறந்த துக்கத்திலும் மாணவன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-04-06 18:45 GMT

புதுப்பேட்டை, 

பண்ருட்டி அடுத்த அக்கடவல்லி கிராமத்தை சேர்ந்தவர் தினகரன்(வயது 47). இவருடைய மகன் சந்துரு(15), திருத்துறையூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறான்.

இந்த நிலையில் அதே கிராமத்தில் உள்ள பாலமுருகன் கோவிலில் நேற்று முன்தினம் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

அந்த வகையில் தினகரன் தனது மகன் சந்துரு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற வேண்டி நோ்த்திக்கடனாக மகனுக்கு அலகு குத்தி கோவிலுக்கு அழைத்து வந்தார். பின்னர் நேர்த்திக்கடன் முடிந்து அலகை கழற்றி வைத்தபோது தினகரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தினகரனை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை பார்த்து சந்துரு கதறி அழுதான். இதையடுத்து தினகரனின் உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வந்தனர்.

சோகத்துடன்...

இந்த நிலையில் நேற்று தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் தேர்வை மாணவன் சந்துரு எழுத வேண்டும் என்று உறவினர்களிடம் தெரிவித்தான். இதையேற்றுக்கொண்ட உறவினர்கள் சந்துரு தேர்வு எழுதி விட்டு வந்ததும் தினகரனின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி சந்துருவை நேற்று காலை தேர்வு எழுத திருத்துறையூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு மாணவன் சந்துரு மிகுந்த சோகத்துடன் தேர்வு எழுதினான். அப்போது மாணவனுக்கு ஆசிரியர்கள் ஆறுதல் கூறினர். பின்னர் தேர்வு முடிந்ததும் வெளியே வந்த சந்துருவை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். பின்னர் தினகரன் உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

தந்தை இறந்த துக்கத்திலும் மாணவன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்