9-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

மோகா புயல் காரணமாக வேதாரண்யத்தில் 9-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2023-05-14 18:45 GMT

வேதாரண்யம்:

மோகா புயல் காரணமாக வேதாரண்யத்தில் 9-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மோகா புயல்

வங்கக்கடல் பகுதியில் தற்போது உருவாகி உள்ள புயலுக்கு 'மோகா' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் விசைப்படகு மீனவர்கள் ஏராளமானோர் தற்போது மீன்பிடிக்க செல்லவில்லை.

சிறிய வகை படகான பைபர் படகு மீனவர்கள் மட்டுமே தற்போது மீன்பிடிக்க சென்று வருகிறார்கள். புயல் எதிரொலியாக பைபர் படகு மீனவர்களும் கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் புயல் எச்சரிக்கையால் நேற்று 9-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கரையை கடந்த பிறகு

மீன் பிடிக்க செல்லாததால் வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். கடந்த 9 நாட்களாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் பைபர் படகுகள் கரையோரம் ஓய்வு எடுத்துவருகிறது. புயல் மியான்மார் நாட்டின் அருகே கரையை கடந்த பிறகு மீன் துறை அறிவிப்பு வந்தபிறகு மீன்பிடிக்க செல்வோம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும் 9 நாட்கள் மீன்பிடிக்க செல்லாததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் வருத்தம் தெரிவித்தனர். வேதாரண்யம் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளை வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையில் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்