முதல் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்

வந்தவாசி கீழ்நமண்டி கிராமத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ரூ.30 லட்சம் செலவில் முதல் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது. இதனை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டார்.

Update: 2023-04-06 17:10 GMT

வந்தவாசி

வந்தவாசி கீழ்நமண்டி கிராமத்தில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ரூ.30 லட்சம் செலவில் முதல் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது. இதனை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டார்.

அகழாய்வு பணிகள்

வந்தவாசியில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் கீழ்நமண்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரலாற்று ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது இந்த கிராமத்தின் வடமேற்கு பகுதியில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால இடுகாடு இருப்பது தெரிய வந்தது. இந்த இடுகாட்டில் தலா 3 மீட்டர் முதல் 5 மீட்டர் வரை விட்டம் கொண்ட 200-க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதில் சேதமடைந்திருந்த கல்வட்டங்களில் இருந்து ஈமப்பேழையின் எச்சங்கள், இரும்புக் கருவிகள், கற்கருவிகள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து இந்தப் பகுதியில் முறையான அகழாய்வு மேற்கொண்டால் பண்டைய தமிழர்களின் பண்பாட்டை உலகறிய செய்யலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

தொடங்கி வைத்தார்

இந்த நிலையில் தமிழக தொல்லியல் துறை சார்பில் ரூ.30 லட்சம் செலவில் கீழ்நமண்டி பகுதியில் முதல் கட்ட அகழாய்வு செய்யும் பணிகள் இன்று தொடங்கியது. இந்த பணிகளை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதையொட்டி கீழ்நமண்டி அகழாய்வு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ், கீழ்நமண்டி அகழாய்வு மைய இயக்குனர் ஜி.விக்டர் ஞானராஜ், மைய பொறுப்பாளர் எம்.சுரேஷ், தெள்ளார் ஒன்றியக்குழுத் தலைவர் கமலாட்சி இளங்கோவன், தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூர்த்தி, குப்புசாமி, கீழ்நமண்டி ஊராட்சி மன்றத் தலைவர் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செப்டம்பர் 30-ந் தேதி வரை

இதைத்தொடர்ந்து அகழாய்வு பணிகளை கலெக்டர் பா.முருகேஷ் பார்வையிட்டார்.

இதுகுறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த இடத்தில் செப்டம்பர் 30-ந் தேதி வரை முதல் கட்ட அகழாய்வு பணிகள் செய்ய உள்ளோம். குத்துக்கல் மற்றும் மெருகூட்ட பயன்படுத்தப்பட்ட பள்ளங்களும் இங்கு காணப்படுகின்றன.

இரும்பு காலத்தைச் சேர்ந்த மண்பாண்டங்களான கருப்பு, சிவப்பு பானை ஓடுகள் மற்றும் மெருகூட்டப்பட்ட சிவப்பு பானை ஓடுகள் குறியீட்டு அடையாளங்களுடன் காணப்படுகின்றன.

புதிய வரலாற்றுக்கு முந்தைய மற்றும் இரும்பு காலங்களை கண்டறிய இந்த ஆய்வு வழி வகுக்கும். மேலும் இந்த பகுதியின் பண்பாட்டு கால வரிசையை புரிந்து கொள்ள உதவும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்