ரூ.270 கோடி மதிப்பில் ஏழைகளுக்கான புதிய குடியிருப்புகள் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை, திருச்சி, நெல்லை உள்பட 9 இடங்களில் ரூ.270 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஏழைகளுக்கான புதிய குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
சென்னை,
தமிழகத்தில் வாழும் நகர்ப்புற ஏழை குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டுவசதியை ஏற்படுத்தி தரும் வகையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் சென்னையில் உள்ள ஆலையம்மன் கோவில் பகுதி 1 திட்டப்பகுதியில் சிதிலமடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு ரூ.41.20 கோடி மதிப்பீட்டில் தூண் தளம் மற்றும் 9 தளங்களுடன் 324 புதிய குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று ஆர்-3 போலீஸ் நிலையம் திட்டப்பகுதியில் சிதிலமடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு ரூ.10.44 கோடி மதிப்பீட்டில் தூண் தளம் மற்றும் 4 தளங்களுடன் 80 புதிய குடியிருப்புகள், வியாசர்பாடி டி.டி பிளாக் திட்டப்பகுதியில் சிதிலமடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு ரூ.60.60 கோடி மதிப்பீட்டில் தூண் தளம் மற்றும் 13 தளங்களுடன் 468 புதிய குடியிருப்புகள், திருச்சி மாவட்டம், கல்மந்தை திட்டப்பகுதியில் சிதிலமடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு ரூ.15.60 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 3 தளங்களுடன் 192 புதிய குடியிருப்புகள், அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் திட்டப்பகுதியில் ரூ.48.98 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 3 தளங்களுடன் 576 புதிய குடியிருப்புகளும், தேனி மாவட்டம், வடவீரநாயக்கன்பட்டி பகுதி-2 திட்டப்பகுதியில் ரூ.16.33 கோடி மதிப்பீட்டில் 175 தரைதள இரட்டை குடியிருப்புகள், நெல்லை மாவட்டம் ரெட்டியார்பட்டி பகுதி 1 திட்டப்பகுதியில் ரூ.41.63 கோடி மதிப்பீட்டில் தரைதளம் மற்றும் 3 தளங்களுடன் 480 புதிய குடியிருப்புகள், நாமக்கல் மாவட்டம் அணைப்பளையம் திட்டப்பகுதியில் தரைதளம் மற்றும் 3 தளங்களுடன் ரூ.18.01 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 208 புதிய குடியிருப்புகள், நீலகிரி மாவட்டம், கடசனக்கொல்லி திட்டப்பகுதியில் ரூ.17.36 கோடி மதிப்பீட்டில் 204 தனி வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.
சிறுவர் பூங்கா
இந்த 9 திட்டப்பகுதிகளில் 400 சதுர அடி பரப்பளவுக்கு குறையாமல் ஒவ்வொரு குடியிருப்புகளும் அமைந்துள்ளது. இந்த குடியிருப்புகள் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.
அனைத்து குடியிருப்பு வளாகங்களிலும் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீரேற்று வசதி, மின் தூக்கிகள், சிறுவர் பூங்கா, மின்னாக்கிகள் மற்றும் தீயணைப்பு வசதிகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 'நம் குடியிருப்பு நம் பொறுப்பு' திட்டத்தின் கீழ் அனைத்து திட்டப்பகுதிகளிலும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
மேற்கண்ட 9 இடங்களில் மொத்தம் ரூ.270.15 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய குடியிருப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து 4,880 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளையும், தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 761 பகுதிகளில் வசிக்கும் 23 ஆயிரத்து 826 பயனாளிகளுக்கு தனி வீடுகள் கட்ட தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.500 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டிலான பணி ஆணைகளையும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான 718 கிரைய பத்திரங்களும், மனைகளுக்கான 220 கிரைய பத்திரங்களும், என 938 பயனாளிகளுக்கு கிரைய பத்திரங்களை வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமை செயலாளர் இறையன்பு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் ஹிதேஸ்குமார் எஸ்.மக்வானா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ் ஆகியோரும், நெல்லை மாவட்டத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் விஷ்ணு, அரியலூர் மாவட்டத்தில் இருந்து அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், கலெக்டர் ரமண சரஸ்வதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.