சென்னைக்கான முதல் காலநிலை செயல் திட்ட கையேடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சென்னைக்கான முதல் காலநிலை செயல் திட்ட கையேட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

Update: 2023-06-13 12:25 GMT

சென்னை,

பருவநிலை மாற்ற தொடர்பான பன்னாட்டு அரசுகளின் குழு (ஐபிசிசி) கடல் மட்ட உயர்வு, கடுமையான அதிக வெப்பநிலை மற்றும் சென்னை போன்ற கடலோர நகரங்களுக்கு காலநிலை பாதிப்புகளால் ஏற்படும் அபாயங்கள் ஆகியவற்றால் கடுமையான சேதங்கள் வரவிருப்பதை எச்சரித்து வருகிறது.

கடற்கரை நகரமான சென்னை போன்ற நகரத்திற்கான காலநிலை செயல் திட்டம், அறிவியலை அடிப்படையாக கொண்ட நடவடிக்கைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை காலநிலை செயல் திட்டம், சென்னையை காலநிலை மீள்தன்மை கொண்ட நகரமாக மாற்றுவற்கான முக்கியமான முதல் படியாகும். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மாசை குறைத்து, காலநிலை சவால்களை எதிர்கொள்ளவும், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் உதவியாக இருக்கும்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், சென்னைக்கான முதல் காலநிலை செயல் திட்ட கையேட்டை வெளியிட்டார். இத்திட்டம், 2050-ம் ஆண்டிற்குள் கார்பன் சமன்பாட்டை சென்னை எட்டுவதற்கும், 2070-ம் ஆண்டிற்குள் கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாக குறைக்கும் இலக்கை எட்டுவதற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சென்னை காலநிலை செயல் திட்டம், தமிழ்நாடு மாநில காலநிலை மாற்றம் குறித்த செயல் திட்டத்துடன் இணைந்து, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் புயல், வெள்ளம் மற்றும் கடல் மட்ட உயர்வு போன்ற பேரிடரில் சிறப்பு கவனம் செலுத்தவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உதவியாக இருக்கும். சென்னை காலநிலை செயல் திட்டம், சி-40 நகரங்கள் ஆதரவுடன் அகமதாபாத்தில் உள்ள நகர்ப்புற மேலாண்மை மையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

இந்த செயல்திட்டம், கார்பன் உமிழ்வை குறைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. அதாவது, 2030-ம் ஆண்டில் 1 சதவீத அதிகரிப்பு, 2040-ம் ஆண்டில் 40 சதவீதம் குறைத்தல் மற்றும் 2050-ம் ஆண்டில் நிகர பூஜ்ஜியம் என்ற நிலையை அடைவதாக உள்ளது. 2050-ம் ஆண்டுக்குள் சென்னையின் 100 சதவீத வணிகக் கட்டிடங்களில் அதிக திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றலை பயன்படுத்துவதை இலக்காகக் கொண்டு செயல்படும்.

சென்னையில் 2050 -ம் ஆண்டுக்குள் 80 சதவீத நகர உள்போக்குவரத்தை பொதுப் போக்குவரத்து மூலம் அடையவும், நடைபயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுதலை ஊக்குவிக்கவும், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் பஸ்களை 100 சதவீதம் மின்மயமாக்குதல் மற்றும் தனியார் வாகனங்களின் மின்மயமாக்கலை ஊக்குவிக்கும் இலக்குகளுடன் செயல்படும்.

2050-ம் ஆண்டுக்குள் நகரத்தின் 35 சதவீத பகுதியில் நகர்ப்புற இயற்கையை விரிவுபடுத்தும் நோக்கம் செயல்படுத்தப்படும். சென்னையில் வெள்ள அபாய மண்டலங்களுக்குள் வசிக்கும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் மறுவாழ்வு, வெப்பத்தைத் தாங்கும் திறன் மற்றும் பரவலாக்கப்பட்ட சுகாதார உள்கட்டமைப்பிற்காக தற்போதுள்ள குடிசை வீடுகளை மறுசீரமைத்தல் போன்ற அனைவருக்கும் அழிவில்லாத காலநிலை இலக்கை நோக்கி சென்னை நகரம் செயல்படும்.

Tags:    

மேலும் செய்திகள்