தீப்பிடித்து எரிந்த குப்பையில் பட்டாசுகள் வெடித்ததால் பரபரப்பு
திண்டுக்கல் அரசு பெண்கள் பள்ளி அருகே தீப்பிடித்து எரிந்த குப்பையில் பட்டாசுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு பள்ளி அருகே குப்பை
திண்டுக்கல் கச்சேரி தெருவில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் திண்டுக்கல் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியை ஒட்டி சிறிய தெரு உள்ளது. அந்த தெருவில் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த தெரு, கடந்த சில ஆண்டுகளாக திறந்தவெளி சிறுநீர் கழிப்பிடமாக மாறி வருகிறது.
இதுமட்டுமின்றி தெருவின் ஓரத்தில் பள்ளிக்கு எதிரே குப்பைகள் கொட்டி குவிக்கப்படுகின்றன. இதனால் வகுப்பறையில் மாணவிகள் அமர முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகளை தினமும் அகற்றாமல் அவ்வப்போது தீ வைத்து எரிப்பது வழக்கமாக உள்ளது.
பட்டாசு வெடித்தது
இந்த நிலையில் நேற்று அங்கு மலைபோல் குவிந்து கிடந்த குப்பைக்கு யாரோ தீ வைத்து விட்டனர். இதனால் குப்பைகள் மளமளவென தீப்பிடித்து எரிந்தன. அதில் இருந்து வெளியேறிய புகை பள்ளி வளாகம் முழுவதும் பரவியது. மேலும் வகுப்பறைக்குள் புகை பரவியதால் மாணவிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.
இதற்கிடையே குப்பையில் யாரோ வீசிய பட்டாசுகள் கிடந்ததாக தெரிகிறது. குப்பைகள் தீப்பிடித்து எரிந்த போது, அதற்குள் கிடந்த பட்டாசுகளும் படபடவென வெடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. இங்கு கொட்டப்படும் குப்பைகளால் ஈக்கள், கொசுத்தொல்லையும் அதிகமாக இருப்பதாக மாணவிகள் கூறுகின்றனர். எனவே ஏராளமான மாணவிகள் பயிலும் அரசு பள்ளிக்கூடம், பிரசித்தி பெற்ற கோவில் அருகே குப்பைகள் கொட்டுவதையும், அந்த தெரு திறந்தவெளி கழிப்பிடமாக மாறுவதையும் முற்றிலும் தடுக்க வேண்டும். மாணவிகளின் நலன்கருதி தெருவை தூய்மையாக வைக்க வேண்டும் என்பது மாணவிகள், பெற்றோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.