களைகட்டி வரும் பொங்கல் பண்டிகை
தமிழர்களின் திருநாளாம் பொங்கல் திருவிழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
பொங்கல் பரிசு
ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியை வெல்லம், பால், நெய் சேர்த்துப் புதுப்பானையிலிட்டு புத்தடுப்பில் கொதிக்க வைத்து பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும். அதனை கொண்டாட தமிழ்நாடு தயாராகிவிட்டது.
அரசு தரப்பில் ரூ.1000 பரிசும், கரும்புடன் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது. எங்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு, மண் பானைகள், கலர் கோலப்பொடி, புத்தாடைகள் விற்பனை களைகட்டி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மண்பானைகள் விற்பனை மும்முரமாக நடக்கிறது. களைகட்டி வரும் பொங்கல் பண்டிகை குறித்து இல்லத்தரசிகள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
மெல்ல நலிவடையும் தொழில்
கறம்பக்குடி சந்தையில் மண்பானைகளை விற்பனை செய்யும் அஷ்டலட்சுமி:- தமிழ் கலாசாரம் மற்றும் பண்பாட்டை இன்றும் நிலைநிறுத்தி கொண்டிருக்கும் தொழிலாக மண்பாண்ட தொழில் உள்ளது. பெரும்பாலும் பொங்கல் நாளில் தற்போது பித்தளை பானைகளிலேயே பலரும் பொங்கல் வைக்க தொடங்கி உள்ளனர். பொங்கல் சீர் வழங்கும் போது யாரும் மண் பானைகளை வழங்குவது இல்லை. இருப்பினும் ஊர்கூடி கொண்டாடும் மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் நாட்களில் கிராம பகுதிகளில் மண்பாண்டங்களே பயன்படுத்தப்படுகிறது. போதிய வருமானம் இல்லை, சமூக அந்தஸ்து கிடைக்காதது போன்ற பல்வேறு காரணங்களால் இளைய தலைமுறையினர் மண்பாண்ட தொழிலில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் தொழில் மெல்ல நலிந்து வருகிறது. இருப்பினும் கறம்பக்குடி பகுதியில் மண்பானை விற்பனை கடந்த ஆண்டைவிட அதிகரித்து உள்ளது. வரும் நாட்களில் நல்ல விற்பனை இருக்கும் என எதிர்பார்த்து உள்ளோம். தமிழ் கலாசாரத்தின் மண் சிற்பிகளான எங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.
கியாஸ் அடுப்பில் பொங்கல்
வடகாடு பகுதியை சேர்ந்த இல்லத்தரசி ராமாயி:- பொங்கல் பண்டிகை என்றாலே கிராமப்புற பகுதிகளில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் சூழ புத்தாடை உடுத்தி பொங்கலிட்டு இப்படி அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்தி வரும் தமிழர்களின் பாரம்பரிய திருவிழா ஆகும். இதை அனைவரும் முன்னெடுத்து அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வது நமது கடமை. ஆனால் நகர்ப்புற பகுதிகளில் கியாஸ் அடுப்பில் எப்போதும் போல சாதாரணமாக பொங்கல் வைத்து சாதாரணமாக முடித்து கொள்கின்றனர். இது தவறான பழக்கம். இளைய தலைமுறையினருக்கு இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமையக்கூடும். பொங்கல் பண்டிகையை இயற்கையுடன் இணைந்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் வீட்டு முற்றத்தில் பொங்கல் வைத்து கொண்டாட வேண்டும். இளைஞர்களிடம் பொங்கல் பண்டிகையின் ஆர்வத்தை அதிகரிக்க பெற்றோர்கள் பண்டிகையின் பயன்பாடுகள் குறித்து கற்றுத்தர வேண்டும். இத்தகைய பொங்கல் விழாக்கள் மூலம், விவசாயிகள், மண் பாண்ட தொழிலாளர்கள் வியாபாரிகள் என அனைவரும் பலன் அடைந்து வருகின்றனர். எனவே பாரம்பரிய முறைப்படி மண் பானையில் பொங்கல் வைத்து நமது பாரம்பரியத்தை காக்க வேண்டும்.
முக்கியத்துவம் தருவதில்லை
மலைக்குடிப்பட்டியை சேர்ந்த இல்லத்தரசி நாகவள்ளி:- பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடை பண்டிகையாகும். இந்த நன்னாளில் உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி கூறும் தினமாககொண்டாடப்படுகிறது. இளைய சமுதாயத்தினர் பண்பாட்டுக்கும், கலாசாரத்திற்கும் உரிய மரியாதை அளிப்பதில்லை. அதனை கடைப்பிடிப்பதும் இல்லை. அதற்கானஆர்வமும் இளைஞர்கள் மத்தியில் குறைந்துவிட்டது. குறிப்பாக நண்பர்கள் தினம், காதலர்கள் தினம், வடநாட்டு பண்டிகைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவம் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளுக்கு தருவதில்லை. செல்போன் வேறு சில இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கிறது.
போட்டிகள்
மேலூரை சேர்ந்த கல்லூரி மாணவி முத்துசெல்வி:- பொங்கல் பண்டிகை என்றால் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் வைத்து சூரியனுக்கு படையல் போட்டு சாமி கும்பிட்ட பின்னர் பொங்கல் சாப்பிடுவதோடு பொங்கல் நிறைவு பெறுகிறது. ஆனால் நம்முடைய முன்னோர்கள் கொண்டாடியது போன்று பொங்கல் திருநாளை நடத்தி நம்முடைய கலாசாரத்தை பேணிக் காக்க வேண்டும். ேமலும் இளைஞர்களிடம் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கான ஆர்வம் குறைந்துவிட்டது என்று கூற முடியாது. ஆனால் பொங்கல் பண்டிைகயை சில கிராமங்களில் இளைஞர்கள் சார்பில், பொங்கல் விழா, விளையாட்டு போட்டிகள் என்று ஆர்வத்ேதாடு கொண்டாடி வருகின்றனர். பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குவதோடு கலை நிகழ்ச்சிகளும் நடத்துகின்றனர்.
குடும்பத்துடன் ஒன்றாக இருக்க வேண்டும்
புதுக்கோட்டை கட்டியாவயலை சேர்ந்த இல்லத்தரசி ஜெயலட்சுமி:- பொங்கல் என்பது தமிழர்களின் முக்கிய பண்டிகையாகும். இதில் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக கூடி பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கம். ஆனால் தற்போது உள்ள எந்திரமயமான வாழ்க்கையில் குடும்பத்தில் உள்ளவர்கள் வெளியூரில் படிப்பவராக இருந்தாலும் அல்லது வேலை செய்யும் இளைஞர்களாக இருந்தாலும் பொங்கலுக்கு ஒன்று கூடினாலும் அன்றையதினம் சினிமா அல்லது நண்பர்களுடன் வேறு எங்காவது சென்றுவிடுகின்றனர். குடும்பத்துடன் அமர்ந்து பொங்கல் வைத்து சூரியனுக்கு படையல் இட்டு சாப்பிட்டு மகிழ வேண்டும் என்ற எண்ணம் முற்றிலும் இல்லை. மேலும் பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்களில் எந்த படத்திற்கு போகலாம் என்ற எண்ணம் தான் இருக்கிறது. இதனை மாற்றி நம்முடைய முன்னோர்கள் கொண்டாடியது போன்று பொங்கல் கொண்டாட இளைஞர்கள் அனைவரும் முன்வர வேண்டும்.குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள், இளைஞர்களுக்கு பொங்கல் பண்டிகையின் பெருமையை எடுத்து கூறி அன்றைய தினம் குடும்பத்துடன் ஒன்றாக இருக்க வலியுறுத்த வேண்டும்.
வாட்ஸ்-அப்களில் வாழ்த்து
விராலிமலையை சேர்ந்த நந்தினி:- தமிழர்களின் மிக முக்கிய விழாக்களில் முதன்மையாக விளங்குவது பொங்கல் திருநாள் ஆகும். பொங்கல் பண்டிகையானது தமிழர்களின் முக்கியமான விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பண்டிகை ஆகும். இந்நாட்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லில் பொங்கல் வைத்து மஞ்சள் மற்றும் கரும்புகளுடன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வேட்டி-சேலை உள்ளிட்ட புத்தாடைகள் அணிந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதே பொங்கல் பண்டிகையின் சிறப்பம்சமாகும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்கள் தங்கள் குடும்பத்தினரோடு கொண்டாடும் விஷயங்களை செல்பி எடுத்து அதனை நண்பர்களுக்கு பகிர்ந்து வாட்ஸ்-அப்களில் வாழ்த்து கூறுவதோடு முடிந்து விடுகிறது. இதனால் பொங்கல் பண்டிகையானது தற்போது திருவிழா போல் இல்லாமல் சாதாரண நாட்களைப் போல் உள்ளது. ஆனால் 10, 20 ஆண்டுகளுக்கு முன்னால் பொங்கல் பண்டிகை என்றாலே விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் தித்திக்கும் பொங்கலாகவே இருந்து வந்தது. எனவே கடந்த காலங்களில் உள்ள நம்முடைய கலாசாரத்தை பறைசாற்றும் விதமாக இதுபோன்ற தமிழ் பாரம்பரிய விழாக்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டங்களில் கொண்டு வர வேண்டும். அவ்வாறு கொண்டு வரும் பட்சத்தில் மட்டுமே தமிழர்களின் பெருமைக்குரிய கலாசாரம் மறையாமல் நிலைத்து நிற்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.