களைகட்டி வரும் பொங்கல் பண்டிகை

தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை களை கட்டி வருகிறது.

Update: 2023-01-12 16:40 GMT

தமிழர்களின் திருநாளாம் பொங்கல் திருவிழா வருகிற 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும்.

அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியை வெல்லம், பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும். அதனை கொண்டாட தமிழ்நாடு தயாராகிவிட்டது.

பொங்கல் பரிசு

அரசு தரப்பில் ரூ.1000 பரிசும், கரும்புடன் ரேசன் கடைகளில் பொங்கல் தொகுப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

எங்கும் பச்சரிசி, வெல்லம், கரும்பு, மண் பானைகள், கலர் கோலப்பொடி, புத்தாடைகள் விற்பனை களைகட்டி வருகிறது.

தேனி மாவட்டத்தில் வயல்பட்டி, போடி, உத்தமபாளையம், தேவதானப்பட்டி, பெரியகுளம் உள்பட பல இடங்களில் மண்பானைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அங்கிருந்து மாவட்டத்தின் பல இடங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. பொங்கல் கொண்டாட்டம் தொடர்பாக தேனி மாவட்டத்தை சேர்ந்த பலதரப்பு மக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

பொங்கல் பானை

முத்துவேல்பாண்டியன் (மண்பானை வியாபாரி, தேனி):-மண்பானையில் பொங்கல் வைப்பது தான் நம்முடைய பாரம்பரியம். தற்போது மண்பானை விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. மக்கள் குறைவான எண்ணிக்கையில் தான் மண்பானை வாங்கிச் செல்கின்றனர். பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக மண்பானை வாங்கிச் செல்கின்றனர். வீடுகளில் கியாஸ் அடுப்பில், குக்கரில் பொங்கல் வைப்பது என்பது, மண்பானையில் வைக்கும் பொங்கலுக்கு எப்போதும் ஈடாகாது. கொரோனா கால கட்டத்தில் மண்பானைகள் விற்பனை பாதிக்கப்பட்டது. இந்த முறை விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், விற்பனை சுமாராகவே உள்ளது.

பாரம்பரியம் மாறாமல்...

வனிதா (குடும்பத்தலைவி, கூடலூர்):- நகர்ப்புற மக்கள் தீபாவளியை கொண்டாடும் அளவுக்கு பொங்கலை கொண்டாடுவது இல்லை. ஆனால், கிராமங்களில் தீபாவளியை விடவும் பொங்கல் தான் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்கள் வீட்டுக்கு முன்பு மண்பானையில் பொங்கலிடுவது இல்லை. கியாஸ் அடுப்பில் பொங்கல் வைக்கின்றனர். ஆனால், கிராமங்களில் ஒவ்வொரு வீடுகளின் முன்பும் மண்பானையில் பொங்கல் வைத்து கொண்டாடப்படுகிறது. வீடுகளுக்கு வெள்ளை அடித்து, வீட்டில் உள்ள உலோக பாத்திரங்கள் அனைத்தையும் கழுவி சுத்தம் செய்து, மீண்டும் பத்திரப்படுத்தும் பழக்கம் இன்றளவிலும் உள்ளது. ஒரு வாரத்துக்கு முன்பே தயாரானால் தான் பொங்கல் அன்று நிறைவாக கொண்டாட முடியும். அந்த வகையில் கிராமங்களில் இன்றளவிலும் பொங்கல் கொண்டாட்டம் பாரம்பரியம் மாறாமல் உயிர்ப்புடன் இருக்கிறது.

சொல்லிக் கொடுக்க வேண்டும்

வேல்மணி (நகைக்கடை ஊழியர், கொடுவிலார்பட்டி) :- பாரம்பரிய ஆடைகள் அணிந்து, பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடுவது என்பது இந்த பண்டிகைக்கும், பண்டிகையை கொண்டாடும் நமக்கும் பெருமை. இன்றைய இளம் தலைமுறையினரிடம் வீட்டின் முன்பு பொங்கல் வைத்து வழிபடும் பழக்கத்தில் பெரிதாக ஆர்வம் இல்லாதது போன்று தெரிகிறது. பண்டிகை காலங்களில் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பதில் இருக்கும் ஆர்வத்தில் பாதி கூட, பாரம்பரிய முறைப்படி பண்டிகைகளை கொண்டாடுவது இல்லை. பெரியவர்கள் நமது பாரம்பரியத்தை இளம் தலைமுறையினருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். பொங்கல் பண்டிகைகளுக்கான பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் அரசு கொடுத்த பொங்கல் பரிசு தொகுப்பும், ரூ.1,000-மும் பல ஏழை குடும்பங்களின் வீடுகளில் நிம்மதியாக பொங்கல் கொண்டாட உதவியாக இருக்கிறது.

ஹரிஷ் ராகவேந்திரா (என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு மாணவர், கம்பம்):- நான் கோவையில் படித்து வருகிறேன். பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டும் என்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளேன். பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதில் தான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது. இந்த முறை பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட இருக்கிறேன். பின்னர், நண்பர்களுடன் தியேட்டருக்கு படம் பார்க்க செல்வது என்று திட்டமிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்