களைகட்டியது தீபாவளி பண்டிகை கடலூரில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகை களைகட்டியதால் கடலூரில் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-10-20 18:45 GMT

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாளில் மக்கள் புத்தாடை உடுத்தி, பலகாரம் உண்டும்,பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதாவது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், கடலூரில் தீபாவளி பண்டிகைக்கான பொருட்கள் விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது.

கடலூர் மாநகரில் இம்பீரியல் சாலை, லாரன்ஸ் சாலையில் உள்ள கடைகளில் தீபாவளி பண்டிகைக்கு தேவையான துணிமணிகள், பட்டாசுகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் நேற்று காலை முதல் இரவு வரை கடலூர் மாநகரில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளதால், ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஜவுளிக்கடைகள் மட்டுமின்றி, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் மக்கள் கூட்டம் இயல்பான நாட்களை விடவும் அதிகமாக காணப்பட்டது. இதனால் மாநகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக லாரன்ஸ் சாலை, இம்பீரியல் சாலையை கடந்து செல்லவே வாகன ஓட்டிகள் பெரும் சிரமமடைந்தனர்.

கூட்டநெரிசலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி திருட்டு-வழிப்பறி, கொள்ளைகளில் ஈடுபடும் ஆசாமிகளை கண்காணிப்பதற்காக அண்ணாபாலம் அருகிலும், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து போலீசார் கண்காணிப்பதுடன், அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தியும் கண்காணித்து வருகின்றனர்.

களைகட்டிய விற்பனை

இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி என மாவட்டத்தில் உள்ள முக்கிய நகர பகுதிகளில் உள்ள கடைவீதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் துணிமணிகள், வீட்டு உபயோக பொருட்கள் என தீபாவளி விற்பனை களைகட்டத் தொடங்கியுள்ளது.

இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்