ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்ட பெண் துணைத்தலைவர்

கீழ்புதுப்பாக்கம் ஊராட்சியில் முறைகேடு நடப்பதாக புகார் தெரிவித்து அலுவலகத்துக்கு பெண் துணைத்தலைவர் பூட்டு போட்டார்.

Update: 2022-08-09 14:06 GMT

செய்யாறு

செய்யாறு ஊராட்சி ஒன்றியம் கீழ்புதுப்பாக்கம் ஊராட்சியில் 15-வது நிதி குழு மானியம் 2020-2021-ம் ஆண்டின் கீழ்புதுப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாமலை நகரில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் மற்றும் 94-வது வீட்டில் செங்குத்து நீர் உறிஞ்சி குழி அமைத்தல் வேலைக்கான டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரரிடம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அப்பகுதியில் பணி நடைபெறவில்லை என்றும், அதற்கு மாறாக ஊர் பொதுக்கால்வாயில் வேலை முடித்து பில் தொகை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேபோன்று தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் செய்யாறு சிப்காட் தொழிற்சாலை பணியில் உள்ள சுமார் 150 பேர் போலியாக உறுப்பினர்கள் உள்ளதாகவும், அதன் வாயிலாக பணிகளுக்கான பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் கிராம ஊராட்சி நிர்வாகத்தில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் குற்றம்சாட்டி கலெக்டர் பா.முருகேசுக்கு துணைத்தலைவர் சங்கீதா புகார் அனுப்பி உள்ளார்.

மேலும் வருகிற 15-ந் தேதி கிராம சபை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து ஊராட்சி அலுவலகத்தில் போட்டிருந்த பூட்டின் மேல் மேலும் 2 பூட்டுகளை துணைத்தலைவர் சங்கீதா பூட்டி உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்