பெண் யானைக்கு உடல்நலக்குறைவு

புளியங்குடி அருகே, வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்

Update: 2022-11-20 18:45 GMT

புளியங்குடி:

புளியங்குடி அருகே, வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

படுத்திருந்த யானை

தென்காசி மாவட்டம் புளியங்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வாசுதேவநல்லூர் `பீட்' மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் நேற்று முன்தினம் புளியங்குடி வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வனப்பகுதியில் ஒரு இடத்தில் யானைகள் கூட்டமாக நின்று பிளிரி கொண்டிருந்ததை கண்டனர். உடனே அருகில் சென்று பார்த்தபோது அங்கு ஒரு பெண் யானை படுத்திருப்பதை பார்த்தனர். யானைகள் கூட்டமாக சுற்றி நின்றதால் வனத்துறையினரால் அந்த பெண் யானை அருகில் செல்ல இயலவில்லை.

வனத்துறையினர் விரைந்தனர்

இதுகுறித்து மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு புளியங்குடி வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை மாவட்ட வன அலுவலர் முருகன் புளியங்குடிக்கு வருகை தந்தார்.

அவருடன் புளியங்குடி வனச்சரகர் கார்த்திகேயன், வனவர்கள் மகேந்திரன், குமார் மற்றும் களக்காடு முண்டந்துறை வன காப்பக கால்நடை மருத்துவர் மனோகரன், நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மற்றும் டாக்டர்கள் அருண்குமார், கருப்பையா, நெல்லை உதவி வன பாதுகாவலர் ஷா நவாஸ் கான் ஆகியோர் சென்றனர்.

பழங்கள் கொடுத்தனர்

அங்கு சத்தம் எழுப்பி சுற்றி நின்ற யானைக்கூட்டத்தை விரட்டினர். பின்னர் படுத்திருந்த அந்த பெண் யானையை பரிசோதித்தனர். அப்போது அந்த யானை உடல் நலக்குறைவு காரணமாக மிகவும் பலகீனத்துடன் காணப்பட்டது தெரிய வந்தது. அந்த யானைக்கு சுமார் 40 வயது இருக்கும்.

அதைத்தொடர்ந்து அந்த யானைக்கு முதலுதவி சிகிச்சைகளும், சோர்வைப் போக்கும் மருந்துகளும் அளிக்கப்பட்டன. மேலும் தென்னை ஓலை, மண்டைவெல்லம், வாழைப்பழம் உள்ளிட்ட பழ வகைகளும் கொடுக்கப்பட்டன. தொடர்ந்து அந்த யானையை வனத்துறையினர் தீவிரமாக பரிசோதித்தும், கண்காணித்தும் வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்