மது போதையில் தகராறு செய்த தந்தையைஉயிரோடு எரித்துக்கொன்ற வாலிபர்
மது போதையில் தகராறு செய்த தந்தையை உயிரோடு எரித்துக்கொன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
தாயில்பட்டி,
மதுேபாதையில் தகராறு செய்த தந்தையை உயிரோடு எரித்துக்கொன்ற வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
மது போதையில் தகராறு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கோட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 60). இவருடைய மனைவி மாரியம்மாள் (55).
பால் வியாபாரம் செய்து வந்த இவர்களுக்கு, கருப்பசாமி (35), சஞ்சீவிகுமார் (32) ஆகிய 2 மகன்களும், முத்துச்செல்வி (30) என்ற மகளும் உள்ளனர்.
இ்தில் கருப்பசாமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருடைய தந்தை கிருஷ்ணசாமி தினமும் மதுகுடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது.
பெட்ரோல் ஊற்றி தீவைப்பு
நேற்று முன்தினம் இரவிலும் அவர், தாய் மாரியம்மாளிடம் போதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி, இருசக்கர வாகனத்திற்காக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து வந்து கண் இமைக்கும் நேரத்தில், தந்தை மீது ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.
இதில் தீ பரவி அலறிய கிருஷ்ணசாமியை அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் இணைந்து தீயை அணைத்து மீட்டனர். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய அவரை சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக ேசர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணசாமி பரிதாபமாக இறந்தார்.
மகன் கைது
இந்த சம்பவம் குறித்து தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் கொடுத்த புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பதுங்கி இருந்த கருப்பசாமியை, சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் கைது செய்தார்.
இதுதொடர்பாக போலீசாரிடம் கருப்பசாமி கூறுகையில், பால் வியாபாரம் மூலம் கிடைத்த பணத்தை தினமும் மதுகுடித்தே தந்தை செலவழித்ததாலும், வீட்டில் உள்ளவர்களுடன் தொடர்ந்து போதையில் தகராறு செய்து வந்ததாலும் எரித்துக்கொன்றேன் என தெரிவித்துள்ளார்.
பெற்ற தந்தை என்றும் பாராமல் பெட்ரோல் ஊற்றி வாலிபர் எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.