திட்டக்குடி அருகேவாலிபரை கத்தியால் குத்திக்கொன்ற தந்தைமாரடைப்பால் இறந்ததாக கூறி நாடகமாடியது அம்பலம்

திட்டக்குடி அருகே வாலிபரை கத்தியால் குத்திக்கொன்று மாரடைப்பால் இறந்ததாக கூறி நாடகமாடிய தந்தை கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-25 18:45 GMT

திட்டக்குடி, 

இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொடிக்களம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 60). கூலி தொழிலாளி. இவருடைய மகன் விநாயகம்(28). இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர். விநாயகம் வேலைக்கு செல்லாமல் தினமும் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் ஆறுமுகத்துக்கும் விநாயகத்துக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவும் விநாயகம் வழக்கம்போல், மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதை பார்த்த ஆறுமுகம் விநாயகத்தை கண்டித்துள்ளார்.

அடக்கம் செய்ய முயற்சி

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து விநாயகத்தின் நெஞ்சில் சரமாரியாக குத்தினார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் மாரடைப்பால் விநாயகம் இறந்து விட்டதாக ஆறுமுகம் அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். மேலும் அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

தந்தை கைது

இதற்கிடையே விநாயகம் கொலை செய்யப்பட்டதாக ஆவினங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விநாயகத்தின் உடலை பார்வையிட்டனர். பின்னர் ஆறுமுகத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் ஆறுமுகம், விநாயகத்தை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டதாக ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து விநாயகத்தின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மகனை தந்தையே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்