வாலிபர் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்

பர்கூர் அருகே தேவர்மலையில் வாலிபர் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளாா்.

Update: 2022-05-30 17:57 GMT

பர்கூர் மலை தாமரைக்கரை அருகே உள்ள தேவர் மலை பாறையூரை சேர்ந்தவர் சிக்கண்ணன் (வயது 59). இவர் தனது உறவினர்களுடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து ஒரு புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில் சிக்கண்ணன் கூறி இருந்ததாவது:-

எனது மகன் சின்ராஜ் என்கிற நாகன் (33). இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வந்தார். கடந்த 21-ந் தேதி இவர் மோட்டார் சைக்கிளில் அந்தியூர் சென்று வந்தார். அவருடன் மேலும் 2 பேர் சென்றனர். பின்னர் வீடு திரும்பிய அவர், மறுநாள் (22-5-2022) காலையில் டீ குடித்து விட்டு வருவதாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. 2 நாட்களாக அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. 24-ந் தேதி அங்குள்ள ஒரு கொட்டகையில் சின்ராஜ் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.

இதுபற்றிய தகவலின் பேரில் பர்கூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பர்கூர் போலீசார் தற்கொலை வழக்கு பதிவு செய்து உள்ளனர். சின்ராஜ் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எனவே அவரது சாவில் சந்தேகம் உள்ளது. இதனை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்