இறந்தவரின் உடலை ஆற்றில் இறங்கி எடுத்துச் செல்லும் அவலம்

திருப்பந்தாள் அருகே இறந்தவரின் உடலை ஆற்றில் இறங்கி எடுத்து செல்லும் அவலம் நீடித்து வருகிறது. ஆகவே, மண்ணியாற்றின் குறுக்கே பாலம் கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2022-08-22 20:08 GMT

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, பந்தநல்லூர் அருகே உள்ள நெப்பு கோவில் என்கிற நெய்குப்பை கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த யாராவது இறக்க நேரிட்டால் அவரது உடலை மயானத்திற்கு எடுத்து செல்வதற்கு உரிய பாதை வசதி இல்லாததால் அப்பகுதியில் உள்ள மண்ணியாற்றில் இறங்கித்தான் எடுத்து சென்று வருகின்றனர்.

இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் இறந்தார். அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு வழக்கம்போல மண்ணியாற்றில் இறங்கிதான் மயானத்திற்கு தூக்கிச் சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் யாராவது இறக்க நேரிட்டால் அவரது உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல பாதை வசதி இல்லை. இதனால், மண்ணியாற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி தான் அவரது உடலை எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த அவலநிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

பாதை வசதி வேண்டும்

எங்கள் கிராமத்திற்கு பாதைவசதி ஏற்படுத்தி தரக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மண்ணியாற்றில் தற்போது தண்ணீர் அதிகளவு உள்ளதால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. ஆகவே, மண்ணியாற்றின் குறுக்கே பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும், அல்லது மயானத்திற்கு செல்ல பாதை வசதி செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.




Tags:    

மேலும் செய்திகள்