இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை சுமந்து செல்லும் அவலம்

வெள்ளியணையில் சுடுகாட்டுக்கு செல்ல பாலம் இல்லாததால் வாய்க்காலில் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவரின் உடலை சுமந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-03-13 18:40 GMT

சுடுகாட்டில் அடக்கம்

கரூர் மாவட்டம் வெள்ளியணை வடக்கு தெரு மற்றும் சுற்று பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த குடும்பங்களை சேர்ந்த யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவர்களின் உடலை அடக்கம் செய்ய குமாரபாளையம் செல்லும் சாலையில் சென்று பின்னர் வெள்ளியணை பெரிய குளத்தில் இருந்து உப்பிடமங்கலம் குளத்திற்கு நீர் செல்லும் வாய்க்கால் கரையோரம் சென்று மறுகரையில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்வது வழக்கம்.

வாய்க்காலில் தண்ணீர் செல்லாமல் இருக்கும் காலங்களில் எளிதாக ஒருகரையிலிருந்து மறு கரைக்கு சென்று விடலாம். ஆனால் வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டிருக்கும் போதும், ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள சிறு சிறு தடுப்பணைகளால் தண்ணீர் தேங்கி நிற்கும் போதும் மழைக்காலங்களிலும் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்வதற்கு தண்ணீரில் இறங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இடுப்பளவு தண்ணீர்

இதனால் சுடுகாடு இருக்கும் பகுதியில் வாய்க்காலின் ஒரு கரையில் இருந்து மறுகரைக்கு செல்ல பாலம் அமைத்து தர வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் அது நிறைவேற்றப்படாமலேயே உள்ளது. இந்த நிலையில் நேற்று வடக்கு தெருவை சேர்ந்த ஒரு மூதாட்டி இறந்துவிட்டார்.

அவருக்கு இறுதி சடங்குகள் செய்த பின்னர் அடக்கம் செய்வதற்காக பொதுமக்கள் வாய்க்காலில் தேங்கி நிற்கும் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி சென்று அடக்கம் செய்தனர். இனிவரும் காலங்களில் தண்ணீரில் இறங்கி சிரமப்படாமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்த பிரச்சினை குறித்து ெவள்ளியணை பகுதியை ேசர்ந்த ெபாதுமக்கள் கருத்து ெதரிவித்துள்ளனா். அதன்விவரம் பின்வருமாறு:-

சரியான பாதை இல்லை

கார்த்தி:- பல்வேறு பகுதிகளிலும் சுற்றுச்சுவருடன் மழைக்காலங்களில் நனையா வண்ணம் தகனமேடை, தண்ணீர் வசதி, மின்விளக்கு வசதி, கருமாதி காரியங்களை செய்ய தனி கொட்டகை என அரசு செய்துள்ளது. ஆனால் எங்கள் பகுதி சுடுகாட்டுக்கு செல்வதற்கு சரியான பாதை வசதியும் வாய்க்காலை கடந்து செல்ல பாலமும் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே அரசு அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

வேதனை அளிக்கிறது

ராஜேஷ்:- தற்போது நகர பகுதிகளில் மின்மயானம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் அங்கு வசிக்கும் பொது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்க்கே வந்து இறந்தவரின் உடலை எடுத்து சென்று எரியூட்டி விடுகின்றனர்.ஆனால் கிராமப் பகுதிகளில் இன்னும் தோளில் சுமந்து சென்று தான் அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதற்கு சரியான பாதை வசதி மிக மிக அவசியம்.

எங்கள் பகுதி சுடுகாட்டிற்கு சரியான பாதை வசதியும், வாய்க்காலை கடந்து செல்ல பாலமும் வேண்டி பலமுறை ஒன்றிய கூட்டங்களில் பேசியும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருப்பது வேதனை தருவதாக உள்ளது. இதனால் ஒருவரின் இறப்பின் போது அடக்கம் செய்வதற்கு இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

வறுமையில் உள்ளனர்

ராஜா:- இப்பகுதியிலும் வசதி உள்ளவர்கள் பலரும் தங்கள் வீடுகளில் இறப்பு ஏற்படும்போது கரூர் மின் மயானதிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்கின்றனர். அதற்கு அவர்களின் உறவினர்களை அழைத்து செல்வதற்கு வாகன ஏற்பாடும் செய்து கொள்கின்றனர்.

ஆனால் இந்த சுடுகாட்டை பயன்படுத்தும் மக்கள் தினக்கூலி தொழிலாளர்களாக மிகவும் வறுமை நிலையில் இருக்கிறார்கள். அவர்களால் இந்த சுடுகாட்டை மட்டும் தான் பயன்படுத்த முடியும். அதற்கு சரியான பாதை வசதி பாலம் வேண்டும் என்பதே பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

அவசியமான ஒன்றாகும்

சமூக ஆர்வலர் மனோ:-

சுடுகாட்டுக்கு செல்லும் வாய்க்கால் கரை என்பது மிக குறுகலாகவும், புதர் மண்டியதாகவும் உள்ளது. தற்போது வெள்ளியணை பெரியகுளத்தில் இருந்து உப்பிடமங்கல குளத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் வாய்க்காலில் கட்டப்பட்டுள்ள சிறுசிறு தடுப்பணைகளில் நிரம்பி தேங்கி நிற்கிறது.

அந்த தண்ணீரில் இறங்கி தான் இறந்தவரின் உடலை சுடுகாட்டுக்கு கொண்டு சென்று இப்பகுதி மக்கள் தற்போது அடக்கம் செய்து வருகிறார்கள். எனவே பாலம் என்பது அவசியமான ஒன்றாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்