தோட்டத்தில் விவசாயி எரித்துக் கொலை

கரூர் அருகே தோட்டத்தில் விவசாயி எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-06-07 18:35 GMT

விவசாயி கொலை

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், ராசாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 72). இவரது தம்பி காத்தவராயன் (68). இவர்கள் 2 பேருக்கும் இடையே நிலம் மற்றும் கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவது சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று வருவதாக வீட்டில் இருந்தவர்களிடம் கூறி விட்டு கருப்பண்ணன் வெளியே சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது கருப்பண்ணன் கால்கள் கட்டப்பட்டு தீயில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

தடயங்கள் சேகரிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் கரூரில் இருந்து மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டது. அந்த நாய் கருப்பண்ணனின் உடலை மோப்பம் பிடித்தவாறு தோட்டத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடி சென்று படுத்துக் கொண்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

பரபரப்பு

பின்னர் போலீசார் கருப்பண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கருப்பண்ணன் கால்கள் கட்டப்பட்டு எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணங்களில் மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்