விராலிமலை தாலுகா, சித்தாம்பூர் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் கடந்த 5-ந் தேதி பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்குவதற்காக கோவில் அருகே உள்ள ஆலமரத்தடியில் சமையல் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த அடுப்பில் இருந்து புகை வெளியேறியதால் ஆலமரத்தின் மேலே கூடு கட்டியிருந்த கதண்டுகள் கூட்டில் இருந்து வெளியேறி மரத்தின் கீழே நின்றிருந்த பலரை விரட்டி விரட்டி கடித்துள்ளது. இதில் சித்தாம்பூரை சேர்ந்த விவசாயி பெரியய்யா (வயது 52), ஆம்பூர்பட்டி மணிகண்டன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பின்னர் அவர்களை அப்பகுதியினர் மீட்டு நீர்பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். இதில் காயமடைந்த பெரியய்யாவை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பையா சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மண்டையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.