தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகனின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்

மகனுக்கு சாதி சான்றிதழ் வாங்க முடியாததால் தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகனின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்.

Update: 2022-10-14 19:28 GMT

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் அண்மையில் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து பலியான அவலம் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது மனைவி மற்றும் 3 பிள்ளைகள் உட்பட அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவர் இறக்கும் தருவாயில், நான் மலைக்குறவன் இனத்தைச் சேர்ந்தவன். எனது மகனுக்கு சாதி சான்றிதழ் கேட்டு அரசு அலுவலகங்களில் பலமுறை அலைந்து பார்த்தேன். ஆனால் சாதி சான்றிதழ் கிடைக்கவில்லை. அந்த வருத்தத்தில் இந்த முடிவை எடுத்தேன் என மரண வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது மனைவிக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

அத்துடன் பழங்குடி சமூகத்தை சேர்ந்த மக்கள் பிற சமூகத்தினரை போல இலகுவாக சாதி சான்றிதழ் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்து பழங்குடி சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்களை கண்டறிந்து தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்