பரிகாரம் செய்வதாக தங்க நகையை அபேஸ் செய்த போலி சாமியார்-தம்பதியை ஏமாற்றி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பினார்
கொண்டலாம்பட்டி அருகே பரிகாரம் செய்வதாக தங்க நகையை போலி சாமியார் அபேஸ் செய்தார். தம்பதியை ஏமாற்றி விட்டு மோட்டார் சைக்கிளில் போலி சாமியார் தப்பினார்.
கொண்டலாம்பட்டி:
தம்பதி
சேலம் கொண்டலாம்பட்டி அருகே தம்மநாயக்கன்பட்டி தீரன் ஊரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 40), இவருடைய மனைவி தனம் (35). இவர்கள் இருவரும் கூலி வேலைக்கு செல்வது வழக்கம். நேற்று காலையில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் சாமியார் வேடத்தில் வந்து நின்றார்.
அப்போது குறி சொல்வதை போன்று, உங்களுக்கு நேரம் சரியில்லை. அந்த கஷ்டங்கள் நீங்க பரிகார பூஜை செய்தால் நன்றாக இருககும் என்று கூறியுள்ளார். அந்த தம்பதியும் இதை உண்மை என நம்பி பரிகார பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
தங்க கம்மல்
பரிகார பூஜை செய்ய தொடங்கிய அந்த நபர் உள்ளங்கையில் எண்ணெயை ஊற்றினார். அதில் ஏதாவது நகைகள் இருந்தால் வையுங்கள். அதனை அணிந்து கொண்டால் கஷ்டங்கள் நீங்கி விடும் என்று கூறியுள்ளார். தனமும் தன்னிடம் வேறு நகைகள் இல்லை என்று கூறியதுடன், தான் காதில் அணிந்து இருந்த கம்மலை கழற்றி உள்ளங்கையில் இருந்த எண்ணெயில் வைத்தார். பின்னர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று பூஜை செய்ய வேண்டும் என்று கூறி பன்னீர்செல்வத்தை மோட்டார் சைக்கிளில் அந்த நபர் அழைத்து சென்றுள்ளார்.
கோவிலுக்கு அருகில் சென்ற உடன், நீங்கள் கோவிலுக்கு உள்ளே சென்று பூஜையை நடத்தி விட்டு வாருங்கள் என்று கூறியுள்ளார். பன்னீர்செல்வம் அதை நம்பி கோவிலுக்குள் சென்றுள்ளார். அந்த நபர் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளார்.
போலீசில் புகார்
இந்த சம்பவம் தொடர்பாக அந்த தம்பதி கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் அந்த போலி சாமியாரை தேடி வருகின்றனர்.
இந்த அறிவியல் யுகத்திலும் பரிகாரம், பூஜை என மூட நம்பிக்கையால் தங்க கம்மலை இழந்த தம்பதியை நினைத்து அந்த பகுதி மக்கள் பரிதாபப்பட்டனர்.