தேனியில் பரபரப்பு: பத்திர எழுத்தர் அலுவலகத்தில் ரூ.6 லட்சம் கொள்ளை
தேனியில் பத்திர எழுத்தர் அலுவலகத்தில் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் 5 கடைகளில் பூட்டை உடைத்து திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரூ.6 லட்சம் கொள்ளை
தேனி பெரியகுளம் புறவழிச்சாலை பகுதியை சேர்ந்தவர் நவநீத கிருஷ்ணன் (வயது 42). பத்திர எழுத்தர். இவர் தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில், பத்திரம் எழுதும் அலுவலகம் வைத்துள்ளார். கடந்த 2-ந்தேதி இரவு அவர், தனது அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்று விட்டார்.
இன்று காலை அவர் அலுவலகத்தை திறக்க வந்தார். அப்போது அலுவலகத்தின் கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் சிதறிக் கிடந்தன. அங்குள்ள மேஜை டிராயரில் வைக்கப்பட்டு இருந்த ரூ.6 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் அதே பகுதியில் உள்ள பழச்சாறு விற்பனை கடை, ஜெராக்ஸ் கடை உள்பட மேலும் 5 கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு, திருட முயற்சி நடந்து இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த பத்திர எழுத்தர் அலுவலகம் மற்றும் திருட்டு முயற்சி நடந்த கடைகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணை
சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த மோப்பநாய் மோப்பம் பிடித்தபடி, முதன்மை கல்வி அலுவலகம் செல்லும் சாலையில் சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது. தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்து, தடயங்களை சேகரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து நவநீத கிருஷ்ணன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் கடைகளின் பூட்டை உடைக்கும் காட்சி பதிவாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.