அமைச்சர் பொன்முடியின் வீடு உள்ளிட்ட 4 இடங்களில்அமலாக்கத்துறையினர் 14 மணிநேரம் சோதனை நிறைவு

அமைச்சர் பொன்முடியின் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் 14 மணி நேர அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நிறைவடைந்தது.

Update: 2023-07-18 18:45 GMT


தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான சென்னை, விழுப்புரத்தில் உள்ள அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட 9 இடங்களில் நேற்று முன்தினம் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இவர் மீது ஏற்கனவே தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு, நில அபகரிப்பு வழக்கு ஆகிய 2 வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நிலையில் தற்போது செம்மண் குவாரி வழக்கு மட்டும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக வெளியான தகவலையடுத்து அமலாக்கத்துறையின் சோதனை நடந்ததாக கூறப்படுகிறது.

14 மணி நேரத்துக்கு பிறகு நிறைவு

விழுப்புரத்தில் கிழக்கு சண்முகபுரம் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அவரது மகன் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி எம்.பி.க்கு சொந்தமான விழுப்புரம் பூந்தோட்டம் பாதையில் உள்ள கயல்பொன்னி ஏஜென்சீஸ் நிறுவனம், விக்கிரவாண்டியில் உள்ள சூர்யா பொறியியல் கல்லூரி மற்றும் அக்கல்லூரி வளாகத்தில் உள்ள கயல்பொன்னி அண்ட் கோ நிறுவன அலுவலகம் என 4 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையானது நேற்று முன்தினம் காலை 8.10 மணிக்கு தொடங்கியது. அமைச்சர் பொன்முடி வீட்டில் தொடர்ந்து, 14 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த சோதனை இரவு 10.35 மணிக்கு நிறைவடைந்தது. அதேபோல் விழுப்புரம் பூந்தோட்டம் பாதையில் உள்ள கயல்பொன்னி ஏஜென்சீஸ் நிறுவனத்தில் இரவு 11.30 மணிக்கும், விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லூரியில் நள்ளிரவு 12.30 மணிக்கும் சோதனையை முடித்துக் கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியே வந்தனர்.

இந்த சோதனையின்போது முக்கிய ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகளிடத்தில் கேட்டபோது, எதைப்பற்றியும் வாய் திறக்காமல் மவுனம் காத்தவாறு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்