மின்கம்பம் முறிந்து விழுந்து முதியவர் பலி

விழுப்புரத்தில் நள்ளிரவில் மின்கம்பம் முறிந்து விழுந்ததில் முதியவர் பலியானார்.

Update: 2022-06-01 19:15 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே சேதமடைந்த நிலையில் மின்கம்பம் ஒன்று இருந்தது. கீழே விழும் நிலையில் இருந்ததால் அதை மின்வாரிய ஊழியர்கள் மாற்ற முடிவு செய்தனர்.

அதன்படி, சமீபத்தில் அங்கு புதிதாக ஒரு மின்கம்பம் நடப்பட்டு அதில் மின்கம்பிகள் இணைத்து அப்பகுதிக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் புதிதாக மின்கம்பம் நடப்பட்ட இடத்திற்கு அருகே இருந்த சேதமடைந்த மின்கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் அகற்றவில்லை.

திடீரென முறிந்து...

இ்ந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் கல்லூரி சாலையை சேர்ந்த கணேசன் (வயது 58), கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் (70), மணி (40) உள்பட சிலர் கோவில் வாசலில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் கோவில் அருகே சேதமடைந்து காணப்பட்ட அந்த மின்கம்பம் திடீரென முறிந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், ராமலிங்கம், மணி ஆகியோர் பலத்த காயமடைந்து வலியால் அலறித்துடித்தனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு வந்து 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

போலீசார் விசாரணை

இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மின் வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் தான் மின்கம்பம் முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்து விட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கீழேவிழுந்த மின்கம்பத்தை அகற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்