சாலையோரம் காரை நிறுத்திய டிரைவரை காலில் விழவைத்து தண்டனை

சாலையோரம் காரை நிறுத்திய டிரைவரை காலில் விழ வைத்து தண்டனை வழங்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு புகார் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-11-07 20:24 GMT

சாைலயோரம் காரை நிறுத்திய டிரைவரை காலில் விழ வைத்து தண்டனை வழங்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு புகார் மனு அளிக்கப்பட்டது.

குறைதீர் நாள் கூட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் பல்வேறுதுறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். லால்குடி நன்னிமங்கலத்தை சேர்ந்த திருநங்கைகள் சமூக நடவடிக்கை அமைப்பை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், எங்களது அமைப்பில் 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளோம். நாங்கள் சமூக மற்றும் குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு வாழ்ந்து வருகிறோம்.

எங்களுக்கு வாடகை வீடு கொடுக்க எவரும் முன்வருவதில்லை. வாடகைக்கு வீடு கொடுத்தாலும் இருமடங்கு வாடகை கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆகவே சமயபுரம் அருகே இருங்களூரில் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் எங்களுக்கு வீடு வழங்க வேண்டும் அல்லது தச்சங்குறிச்சி பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

டிரைவரிடம் வாக்குவாதம்

சமூகநீதி அனைத்து வாகன டிரைவர்கள் தொழிற்சங்கம் சார்பில் மாநில தலைவர் பத்மராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் அளித்த மனுவில், எங்களது சங்கத்தை சேர்ந்த துறையூர் செங்காட்டுப்பட்டியை சேர்ந்த டிரைவர் சுரேஷ் கடந்த 4-ந் தேதி தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் சென்றார். அங்கு பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தில் காரை நிறுத்தி இருந்தார்.

அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் இங்கு காரை நிறுத்தக்கூடாது என்று கூறி வாக்குவாதம் செய்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளாார். மேலும், அவரை 3 முறை காலில் விழ வைத்து தண்டனை வழங்கி உள்ளார். ஆகவே இந்த செயலில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

காப்பீட்டுத்தொகை

முசிறி உழவர் உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், "நாங்கள் முசிறி ஒன்றியத்தில் நெற்பயிர் காப்பீடு செய்துள்ளோம். கடந்த 2021-22-ம் ஆண்டுக்கான நெற்பயிர் காப்பீட்டு தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் நாங்கள் சிரமப்பட்டு வருகிறாம். எனவே காப்பீட்டு தொகை விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்று கூறி இருந்தனர். இனாம் குளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள காரணத்தால் வகுப்பறையில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகவே புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று மாணவர்கள் சிலர் மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்