நண்பருக்கு ஆதரவாக பேசிய டிரைவர் அடித்துக்கொலை
கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் நண்பருக்கு ஆதரவாக பேசிய டிரைவரை அடித்துக்கொன்ற 4 பேரை போலீஸ் தேடுகிறது.
கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் நண்பருக்கு ஆதரவாக பேசிய டிரைவரை அடித்துக்கொன்ற 4 பேரை போலீஸ் தேடுகிறது.
டிராக்டர் டிரைவர்
விருதுநகர் அருகே உள்ள சென்னல்குடியை சேர்ந்த பரமசிவம்-மாரீஸ்வரி தம்பதியினரின் மகன் விக்னேஷ் என்ற விக்னேஸ்வரன் (வயது 25). பரமசிவம் கடந்த 2008-ம் ஆண்டு இறந்து விட்ட நிலையில் விக்னேஸ்வரன் விருதுநகர் அருகே உள்ள சின்னவாடியூரில் தனது தாய்மாமன் கணேசன் (39) என்பவருடன் வசித்து வந்ததுடன் டிராக்டர் டிரைவராக இருந்து வந்தார். விக்னேஸ்வரன் அவ்வப்போது சென்னல்குடி சென்று தனது தாயாரை பார்த்து வருவது வழக்கம்.
சம்பவத்தன்று விக்னேஸ்வரன் தனது நண்பர் நரேஷ் குமார் மோட்டார் சைக்கிளில் தனது தாயாரை பார்க்க சென்றார். அப்போது தாதபட்டியை சேர்ந்த மதன் குமார் என்பவர் நரேஷ்குமாரிடம் செல்போனில் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை பற்றி பேசினார்.
மூச்சுத்திணறல்
விக்னேஸ்வரனின் செல்போனை வாங்கி மதன்குமாருடன் பேசிய போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னல்குடியில் தாயாரை பார்த்துவிட்டு தனது நண்பர் செல்வகுமார் என்பவரது இருசக்கர வாகனத்தில் விக்னேஸ்வரன் ஊருக்கு திரும்பினார்.
அப்போது கன்னிசேரி புதூர் ஆத்துப்பாலம் அருகில் பெட்டிக்கடைமுன்பு மது அருந்துவதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கினர். அப்போது அங்கு வந்த மதன்குமார், அவரது நண்பர் தாதபட்டியை சேர்ந்த மகாராஜா, டி.காமராஜர்புரத்தை சேர்ந்த கருப்பு ராஜா, துலுக்கப்பட்டியை சேர்ந்த குணா ஆகிய 4 பேரும் சேர்ந்து விக்னேஸ்வரனை சுற்றி வளைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு இருந்தவர்கள் சத்தம் போடவே 4 பேரும் விக்னேஸ்வரனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இந்நிலையில் படுகாயமடைந்த விக்னேஸ்வரனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து விக்னேஸ்வரன் தனது நண்பர்களான ரமேஷ், ஆனந்தராஜ் ஆகியோரை வரச் சொல்லி அவர்களுடன் வீடுதிரும்பினார்.
4 பேர் மீது வழக்கு
விக்னேஸ்வரனின் நிலையை கண்ட அவரது தாய்மாமன் கணேசன் உடனடியாக அவருக்கு தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் அவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கணேசன் கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் மதன் குமார், மகாராஜா, கருப்பு ராஜா, குணா ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் நண்பருக்கு ஆதரவாக பேசியதற்காக விக்னேஸ்வரன் அடித்துக்கொல்லப்பட்டது சின்னவாடியூர் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.