மதுபோதையில் பஸ்சை தாறுமாறாக ஓட்டிய டிரைவர் பணியிடை நீக்கம்

நாகர்கோவிலில், மதுபோதையில் அரசு பஸ்சை தாறுமாறாக ஓட்டிய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-06-14 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில், மதுபோதையில் அரசு பஸ்சை தாறுமாறாக ஓட்டிய டிரைவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தாறுமாறாக ஓடிய அரசு பஸ்

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து காட்டுப்புதூர் நோக்கி நேற்றுமுன்தினம் இரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ் ஆராட்டு ரோட்டில் சென்றபோது திடீரென தாறுமாறாக ஓடியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர். பின்னர் எஸ்.எம்.ஆர்.வி. சந்திப்பு அருகே சென்றபோது சாலை ஓரம் இருந்த கழிவுநீர் ஓடையில் கவிழும் நிலை ஏற்பட்டது.

உடனே பஸ்சை நிறுத்தும்படி பயணிகள் கூச்சலிட்டனர். அதைத்தொடர்ந்து பஸ்சை டிரைவர் நிறுத்தினார். அப்போது தான் டிரைவர் மதுபோதையில் பஸ்சை இயக்கியது தெரியவந்தது. உடனே பஸ்சை விட்டு பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர். இதுபற்றி வடசேரி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

டிரைவர் பணியிடை நீக்கம்

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், புளிக்கோடு பகுதியை சேர்ந்த பெனட் என்பதும், மது போதையில் பஸ்சை ஓட்டியதும் தெரியவந்தது. பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டா்கள் அவர் மது போதையில் இருந்ததை உறுதி செய்தனர். அதைத்தொடர்ந்து பெனட் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் பஸ் டிரைவர் பெனட் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவரை போக்குவரத்துக் கழக அதிகாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்