நாகர்கோவிலில் ரத்த காயங்களுடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்த டிரைவர்

நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரோடு ரோலர் டிரைவர் ரத்த காயங்களுடன் வந்து, கஞ்சா வியாபாரிகள் தாக்கியதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-08-14 21:17 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ரோடு ரோலர் டிரைவர் ரத்த காயங்களுடன் வந்து, கஞ்சா வியாபாரிகள் தாக்கியதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கஞ்சா விற்பனை

இறச்சகுளம் விஷ்ணுபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 39), ரோடு ரோலர் டிரைவர். இவருக்கு தேவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் முருகன் நேற்று முகத்தில் வெட்டு காயத்துடன் ரத்தம் சொட்ட சொட்ட நாகர்கோவிலில் உள்ள போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி, விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் உள்ள விஷ்ணுபுரம் காலனியில் கஞ்சா விற்பனை நடக்கிறது. இதுதொடர்பாக பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தோம். எனினும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக கஞ்சா வியாபாரிகளை பிடித்தாலும் அவர்களை பஸ் நிறுத்தத்தில் கொண்டு சென்று விட்டு, விட்டு சென்று விடுகிறார்கள். போலீசாரின் இந்த செயலால் புகார் அளித்தவர்களையே கஞ்சா வியாபாரிகள் மிரட்டும் சம்பவங்கள் அறங்கேறி வருகிறது.

பீர் பாட்டிலால்தாக்குதல்

இந்த நிலையில் இன்று (அதாவது நேற்று) மாலை ஒரு துக்க நிகழ்ச்சியில் நான் குடும்பத்தோடு கலந்து கொண்டேன். அப்போது அங்க கஞ்சா வியாபாரிகளான அண்ணன்- தம்பி மற்றும் கஞ்சா வாங்க வந்த 4 பேர் என மொத்தம் 6 பேர் வந்து எங்களை தாக்கினர். இதில் என் மகனுக்கு காயம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நான் அவர்களை தடுக்க முயன்றேன். ஆனால் ஆத்திரமடைந்த அவர்கள் என்னை பீர் பாட்டிலால் முகத்தில் தாக்கினர். இதில் என் முகத்தில் வெட்டு ஏற்பட்டு ரத்தம் வடிந்தது. பூதப்பாண்டி போலீஸ் நிலையம் சென்றால் எங்களுக்கு நியாயம் கிடைக்காது என்பதால் இங்கு வந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து முருகனையும், அவரது குடும்பத்தாரையும் ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்