திராவிட மாடல் அரசு விளையாட்டு துறைக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும்-அமைச்சர் எ.வ.வேலு

திராவிட மாடல் அரசு விளையாட்டு துறைக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

Update: 2023-06-25 16:07 GMT

திராவிட மாடல் அரசு விளையாட்டு துறைக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

விளையாட்டு போட்டிகள்

திருவண்ணாமலையில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்களுக்கு முதல்- அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.இதில் உள் விளையாட்டு அரங்க போட்டிகள், வெளி மைதான போட்டிகள் என 50 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 11 ஆயிரத்து 790 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவு போட்டிகளிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 1,950 வீரர், வீராங்கனைகள் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்றனர். இதில் முதலிடம் பிடித்த 649 பேர் மாநில அளவிலான முதல்- அமைச்சர் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா திருவண்ணாமலை மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் வரவேற்றார்.

உறுதுணையாக இருக்கும்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் விளையாட்டு துறை சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இந்தியாவிலேயே பிற மாநிலங்களுக்கு இணையாக தமிழ்நாட்டை கொண்டு வருவது முதல்- அமைச்சரின் நோக்கமாகும். திராவிட மாடல் அரசானது விளையாட்டு துறைக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும்.

விளையாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத் திறனாளிகள் என அனைவரும் பங்கேற்க வேண்டும். ஏனென்றால் இதன் மூலம் உடல் வலிமை, மன உறுதி, போட்டி மனப்பான்மை உருவாகும். மேலும் கல்வி, பொருளாதாரத்தில் சிறந்து விளங்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

எம்.எல்.ஏ.க்கள்

விழாவில் எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, அம்பேத்குமார், பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாநில கைப்பந்து சங்கத் துணைத் தலைவர் இரா.ஸ்ரீதரன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கார்த்திவேல்மாறன், திருவண்ணாமலை ஒன்றியக்குழு உறுப்பினர் கலைவாணிகலைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்