வீட்டின் கதவை உடைத்து 90 பவுன் நகை-ரூ.70 ஆயிரம் கொள்ளை

திருச்சியில் ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரியின் வீட்டின் கதவை உடைத்து 90 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-10-05 19:44 GMT

திருச்சியில் ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரியின் வீட்டின் கதவை உடைத்து 90 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி

திருச்சி உறையூர் ராமலிங்க நகர் மேற்கு விஸ்தரிப்பு 2 -வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர் அபுதாபியில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கனிமொழி (வயது 36). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். செந்தில் நாதனின் தாயார் மாலினி (62). இவர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

இந்நிலையில் கடந்த 1-ந்தேதி கனிமொழி மகன்களுடன் சீர்காழியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா கொண்டாட சென்றார். அவர்களுடன் மாலினியும் சென்று இருந்தார். இதைத்தொடர்ந்து நேற்று காலை 11 மணி அளவில் இவரது எதிர் வீட்டில் உள்ளவர்கள் செந்தில்நாதனின் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

நகை-பணம் கொள்ளை

உடனடியாக அவர்கள் சீர்காழியில் உள்ள கனிமொழிக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த கனிமொழி வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 89½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.70 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம ஆசாமிகள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த திருச்சி வடக்கு துணை கமிஷனர் அன்பு, உறையூர் உதவி கமிஷனர் ராஜூ மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். போலீஸ் மோப்ப நாய் பொன்னி வரவழைக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்ட இடத்தில் மோப்பம் பிடித்தது. பின்னர் 2 முறை வீட்டை சுற்றி வந்து சுமார் 400 மீட்டர் தூரம் ஓடி சென்று நின்றது.

கண்காணிப்பு கேமரா ஆய்வு

மேலும் கொள்ளைபோன வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் பக்கத்து வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வலை வீசி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்