கடந்த ஆட்சியில் போதைப்பொருட்கள் விற்றதாக கூறுவதா?தற்போதைய சம்பவங்களுக்கு தி.மு.க. அரசே காரணம்அமைச்சர் பொன்முடிக்கு சி.வி.சண்முகம் எம்.பி. பதிலடி

கடந்த ஆட்சியில் போதைப்பொருட்கள் விற்றதாக கூறுவதா? என்றும் தற்போதைய சம்பவங்களுக்கு தி.மு.க. அரசே காரணம் என்று சி.வி.சண்முகம் எம்.பி. தொிவித்துள்ளாா்.

Update: 2023-05-15 18:45 GMT


பிரம்மதேசம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோஷணை போலீஸ் நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த புகாரில் தன்னை பற்றியும், தான் சார்ந்த அ.தி.மு.க.வை பற்றியும் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி அவதூறு பரப்பி வருகிறார்.

எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு சென்ற முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், புகார் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்தார். பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சி.வி.சண்முகம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நிர்வாகம் என்றால் என்னவென்று தெரியாத ஒரு முதல்-அமைச்சர் ஆட்சி செய்வதால் இன்றைக்கு பலர் கள்ளச்சாராயத்தால் பலியாகி உள்ளனர். உயிர் பலியாகி உள்ள குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டும் சரியாகிவிடுமா?,

உயிரிழந்தவர்களை தவிர்த்து இன்னும் 50 பேர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் ஆகியோர் இந்த கள்ளச்சாராயத்தை யார் விற்பனை செய்தது? இதற்கு யார் காரணம் போன்ற தகவல்களை கூறாமல் கடந்த ஆட்சியில் போதைப் பொருட்கள் விற்றதாக கூறுகிறார்கள், இந்த 2 ஆண்டுகள் முதல்-அமைச்சராக இருப்பது எடப்பாடி பழனிசாமி அல்ல மு.க.ஸ்டாலின் தான். தற்போது நடைபெற்றுள்ள இந்த சம்பவங்களுக்கு தி.மு.க. அரசே காரணம்.

தி.மு.க.வினர் தான் அதிக அளவில் போதைப்பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். டாஸ்மாக் கடைகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு பதிலாக 24 மணி நேரமும் மது விற்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்