மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் யாரும் விடுபடாத வகையில் விண்ணப்பப்பதிவு முகாம்களை நடத்த வேண்டும் அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் யாரும் விடுபடாத வகையில் விண்ணப்பப்பதிவு முகாம்களை நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுரை வழங்கியுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வளர்ச்சித்துறை முதன்மை செயலாளருமான ஹர்சகாய் மீனா தலைமை தாங்கினார். கலெக்டர் பழனி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் ஹர்சகாய் மீனா பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத்திட்டத்தின்கீழ் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். மேலும், இந்த திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்து, உரிமைத்தொகை வழங்க பல்வேறு அறிவுரைகளையும் அவர் வழங்கியுள்ளார்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பம் பதிவு செய்யும் சிறப்பு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும்
இதில் முதல் கட்ட விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம் வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 2-ம் கட்ட முகாம் 5.8.2023 முதல் 16.8.2023 வரை நடைபெறவுள்ளது.
ரேஷன் கடை பணியாளர்கள், அந்தந்த கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீட்டில் நேரடியாக வழங்கவுள்ளனர்.
எனவே, விண்ணப்பத்தை பெறும் குடும்பத்தலைவிகள் அதனை பூர்த்தி செய்து சரிபார்ப்புக்கு உரிய ஆவணங்களுடன் முகாமுக்கு எடுத்து வரவேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும்.
ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.
ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவிகளாக கருதப்படுவர். இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 1077 மற்றும் 04146-223265 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம். அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, இந்த திட்டத்தில் தகுதியான பயனாளிகள் எவரும் விடுபடாத வகையில், முகாம்களை சிறப்பாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.