மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் 4 நாட்கள் நடக்கிறது
குமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் 4 நாட்கள் நடக்கிறது என கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் 4 நாட்கள் நடக்கிறது என கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ரூ.2 ஆயிரம் உதவித்தொகை
குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை (7, 8-ந் தேதி தவிர) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று மனு அளிக்கலாம்.
முக்கியமாக வருவாய்த்துறை சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெறுபவர்கள் அல்லது இதுநாள் வரை உதவித்தொகை பெறாதவர்களில் 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் கடுமையாக உடல் இயக்கம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், 40 சதவீதம் மற்றும் அதற்குமேல் மனவளர்ச்சி குன்றியவர்கள் ஆகியோர் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் மாதம் ரூ.2 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மனவளர்ச்சி குன்றிய அல்லது மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தொழுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள், பார்கின்சன் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தண்டுவட மரபு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வாழ்நாள் சான்று
மேலும் ரூ.2 ஆயிரம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறும் பயனாளிகளின் விவரப்பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்க மற்றும் கடந்த ஆண்டிற்கான வாழ்நாள் சான்று இதுவரை வழங்காதவர்களும் முகாமில் கலந்துகொண்டு சமர்பிக்கலாம்.
முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், வங்கி புத்தக நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் பாதுகாவலர்கள் கலந்து கொண்டு விண்ணப்பித்து மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.