தமிழகத்தின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது

தமிழகத்தின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2022-08-25 17:41 GMT

வெளிப்பாளையம்:

நாகையில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் பட்டியலிட்டு அளித்தால், அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற பரிசீலிக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்கள் நிறைவேற்றப்படும். இந்த அறிவிப்பை மனித நேயமக்கள் கட்சி வரவேற்கிறது. பா.ஜனதா ஆளுகின்ற உத்தரபிரதேசம், ஜார்கண்ட், இமாச்சலப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் கூட இலவசங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநில அரசும் பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்துள்ளது.இதை பா.ஜ.க எதிர்ப்பதில்லை.ஆனால் தமிழகத்தில் இலவசங்கள் கொடுப்பதை பா.ஜ.க எதிர்க்கின்றது. இது பா.ஜ.கவின் இரட்டைவேடத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு.இந்தியாவில் பா.ஜ.வு.க்கு எதிராக எந்தவொரு அரசியல் கட்சியும் இருந்து விடக்கூடாது என்பதற்காகவே சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை ஏவல் துறையாக பயன்படுத்தி, ஜனநாயகத்துக்கு கேடு விளைவித்து வருகிறது. இதை ம.ம.க. வன்மையாகக் கண்டிக்கிறது. இலவசத்திட்டங்களால் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட இலவசத் திட்டங்களால் கல்வியில் தமிழகம் முன்னேறிய மாநிலமாக மாறியுள்ளது. குஜராத், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பா.ஜ.க ஆளுகின்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகம் வளர்ச்சியிலும் சிறப்பாகவே உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்