வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் - தொழிலாளர் உதவி ஆணையாளர் தகவல்

வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையாளர் தகவல் தொிவித்துள்ளாா்.

Update: 2023-06-19 20:45 GMT

வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையாளர் வெ.மு.திருஞானசம்பந்தம் தெரிவித்து உள்ளார்.

இணையதளத்தில் பதிவு

ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி, சுருட்டு நிறுவனங்கள், கோழிப்பண்ணைகள், விவசாயம், உள்ளாட்சி அமைப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்லுாரிகள், முடிதிருத்தும் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை https://labour.tn.gov.in/ism/என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

சுயவேலை செய்பவர்கள், பாதுகாவலராக பணிபுரிவோர், வீட்டு வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களையும் வேலை அளிப்பவர்கள், வெளிமாநில தொழிலாளர் வலைதளப்பக்கத்தில் பயனாளர் குறியீடு, கடவு சொல் ஏற்படுத்தி பதிவு செய்ய வேண்டும்.

அப்போது தொழிலாளர்களின் ஆதார் எண், செல்போன் எண், எந்த மாநிலத்தை சேர்ந்தவர் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கடும் நடவடிக்கை

தொழில் நிறுவனங்கள், கடைகளை வைத்திருப்பவர்கள் தொழிலாளர் நலத்துறையின் படிவம்-3 சான்று பெற்று உரிய விவரத்தை வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும். பேக்கரிகள், உணவு நிறுவனத்தினர் உணவு நிறுவன உரிமம் பெற்று தங்களது நிறுவனங்களில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை மோட்டார் போக்குவரத்து தொழிலாளர் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்று பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதேபோல் கோழிப்பண்ணைகள், செங்கல் சூளைகள், சுய வேலை செய்வோர், விவசாயம், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் ஆகிய இடங்களில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களையும் பதிவேற்ற வேண்டும். பதிவு செய்யப்படாத நிறுவனங்கள், திடீர் ஆய்வின்போது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் உதவி ஆணையாளர் வெ.மு.திருஞானசம்பந்தம் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்