சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்வு
புதுக்கோட்டையில் நாட்டு வெடி ஆலை விபத்தில் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
நாட்டு வெடி ஆலை
புதுக்கோட்டை அருகே பூங்குடியில் கடந்த 30-ந் தேதி நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் வெடிகள் வெடித்து சிதறியதில் அந்த ஆலையில் வெடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த உரிமையாளர் மற்றும் 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலன் இல்லாமல் கடந்த 3-ந் தேதி இரவு புதுக்கோட்டை கோவில்பட்டியை சேர்ந்த தொழிலாளி வீரமுத்து (வயது 31) இறந்தார். மற்றொரு தொழிலாளியான திருமலை (30) என்பவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்வு
மருத்துவமனையில் நாட்டு வெடி ஆலையின் உரிமையாளரான வைரமணி (44), தொழிலாளார்கள் சுரேஷ் (37), குமார் ஆகியோர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த சுரேஷ் நேற்று நள்ளிரவில் பரிதாபமாக இறந்தார்.
இதனால் சாவு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டு வெடி ஆலை விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.