குவைத்தில் இறந்த தந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும்-சிறுவன் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை
குவைத்தில் இறந்த தந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என்று சிறுவன் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளான்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள மணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜபாண்டி.கடந்த 4 ஆண்டுக்கு முன் ஆடு மேய்க்கும் கூலி தொழிலுக்கு குவைத் பருவாணி என்ற இடத்திற்கு சென்ற அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனே ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்து சென்ற போது வழியில் இறந்ததாக அவருடன் பணிபுரிந்த சக நண்பர்கள், ராஜபாண்டியின் மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜபாண்டியின் குடும்பத்தினர், உறவினர்கள் அவரது உடலை சொந்த ஊர் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இறந்த ராஜபாண்டிக்கு முத்துப்பாண்டி அம்மாள் என்ற மனைவியும் வாஞ்சிநாதன், சங்கர பாண்டியன், சிவமுருகன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அவரது 2-வது மகன் சங்கரபாண்டியன் (வயது 7), தனது தந்தையின் உடலை கொண்டுவர முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளான்.
அதில் அந்த சிறுவன், ஐயா முதல்-அமைச்சர் ஐயா! எங்க அப்பாவை பாக்கனும் போல இருக்கு. எங்க அப்பா இங்க வரனும். எங்கள படிக்க வைக்கனும்னு வெளிநாட்டுக்கு போனாரு. இறந்துட்டாருன்னு போன்ல சொல்றாங்க என தந்தையின் உடலை கொண்டு வர சிறுவன் மழலை குரலில் ஆடியோவில் வேண்டுகோள் விடுத்தது சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்த ஆடியோவை கேட்கும் போது மனது வலிக்கிறது. சிறுவனின் கோரிக்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.