சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்
திருமருகல் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி ஊராட்சி கணபதிபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கணபதிபுரம், ஏர்வாடி இடையாத்தங்குடி, கிடாமங்கலம், பரமநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். தினமும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக இரு சக்க வாகனத்தில் வரும் பொதுமக்கள் தடுமாறி விழுந்து காயம் அடைக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.