பாலத்தின் பக்கவாட்டு சுவரில் இடிந்த பகுதியை சீரமைக்க வேண்டும்
தஞ்சை பெரிய கோவில் அருகே கல்லணைக்கால்வாயின் குறுக்கே உள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவரில் இடிந்து விழுந்துள்ள பகுதியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தஞ்சை பெரிய கோவில் அருகே கல்லணைக்கால்வாயின் குறுக்கே உள்ள பாலத்தின் பக்கவாட்டு சுவரில் இடிந்து விழுந்துள்ள பகுதியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
கல்லணைக்கால்வாய்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் திகழ்கிறது. ஆறுகள் பொதுவாக இயற்கையாகவே தோன்றி பள்ளத்தை நோக்கி செல்லும். ஆனால் கல்லணையில் தொடங்கி தஞ்சை மாநகரம் வழியாக செல்லும் கல்லணைக்கால்வாய் என்கிற புதுஆறு மேடான பகுதிகளுக்குள்ளும் புகுந்து சென்று கடைமடை வரை செல்கிறது. இது விவசாயத்திற்காக மனிதர்களால் வெட்டப்பட்டது.
பல்வேறு பொறியியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த கல்லணைக்கால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தஞ்சை மாவட்டத்தின் வானம் பார்த்த பூமியாக இருந்த ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி வரையிலான சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசனவசதி அளிக்கும் வகையில் கல்லணைக்கால்வாய் வெட்டப்பட்டது. இந்த கால்வாய் 337 கிளை வாய்க்கால்களை கொண்டுள்ளது.
பாலங்கள்
இந்த கல்லணைக்கால்வாயின் குறுக்கே பாலங்கள், மதகுகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல பாலங்கள் தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. தஞ்சை பெரியகோவில் அருகே கல்லணைக்கால்வாய் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக இருசக்கர வாகனங்கள், பஸ்கள், கார்கள், வேன்கள் சென்று வருகின்றன. விடுமுறை நாட்களில் வெளியூரில் இருந்து பெரியகோவிலுக்கு ஏராளமானோர் வாகனங்களில் வரும்போது, இந்த பாலத்தின் வழியாக வழக்கத்தைவிட கூடுதல் வாகனங்கள் சென்று வரும்.
பக்கவாட்டு சுவர் இடிந்தது
இந்த பாலம் பழுதடைந்தநிலையில் உள்ளதால் இதற்கு மாற்றாக அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. பெரியகோவில் எதிரே உள்ள வாகன நிறுத்துமிடத்திற்கு செல்லும் வாகனங்கள் மட்டுமே இந்த புதிய பாலத்தின் வழியாக சென்று வருகின்றன.
இந்த நிலையில் பழைய பாலத்தை ஒட்டி கட்டப்பட்டுள்ள பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்த காணப்படுகிறது. இதனால் தடுப்புச்சுவர் இன்றி பெரிய பள்ளம் போல கல்லணைக்கால்வாய் காட்சி அளிக்கிறது.
வாகன ஓட்டிகள் அச்சம்
இதனால் மேம்பாலம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்கள் நிலை தடுமாறி கல்லணைக்கால்வாய்க்குள் விழுந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. மேலும், பெரிய கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து கிடப்பதால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படலாம் என தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தஞ்சை பெரிய கோவில் அருகே கல்லணைக்கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் இடிந்து கிடக்கும் பகுதியை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.