சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும்
சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும்
கூத்தாநல்லூர் அருகே சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்சரிவு
கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் காடுவெட்டித் தெரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையொட்டிய சாலையோரத்தில் வெண்ணாற்றில் இருந்து வரும் தண்ணீரை அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக நாகங்குடி பாசன வாய்க்கால் ஏற்படுத்தப்பட்டது. இந்த பாசன வாய்க்கால் சாலையின் குறுக்கே செல்வதால், சாலையின் குறுக்கே குழிதோண்டப்பட்டு அதன் கீழே குழாய்கள் பதிக்கப்பட்டு மேல்பகுதியில் தரைப்பாலம் கட்டப்பட்டது. இதில் இரண்டு பக்கமும் தடுப்பு சுவரும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு பக்கம் உள்ள தடுப்பு சேதமடைந்த நிலையில் அங்கு மிகப்பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டது. மேலும் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் நாளுக்கு நாள் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.
சேதமடைந்த தரைப்பாலம்
இதனால் சாலையில் விரிசல்கள் ஏற்பட்டு விபரீதம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. சாலையோரத்தில் ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். ஆபத்தான வளைவில் பள்ளம் இருப்பது தெரியாததால் வாகன ஓட்டிகள் சிலர் பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்துள்ளனர். ஏதேனும் விபரீதம் நடப்பதற்கு முன்பு சேதமடைந்த தரைப்பாலத்தையும், அங்கு ஏற்பட்ட பள்ளத்தையும் சீரமைத்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து கூத்தாநல்லூரை சேர்ந்த முருகேசன் கூறுகையில் இந்த சாலையில் கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், மன்னார்குடி, திருவாரூர், கொரடாச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர் போன்ற மிக முக்கிய ஊர்களுக்கு சென்று வர எளிதான வழி என்பதால் அரசு பஸ்கள் முதல் தனியார் பஸ்கள் வரையிலும், பள்ளி வாகனங்கள், கல்லூரி வாகனங்கள் மற்றும் பல்வேறு வாகனங்கள் இந்த சாலையில் தினமும் சென்று வருகின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் காடுவெட்டி என்ற இடத்தில் சாலையோரத்தில் ஏற்பட்ட பள்ளம் வாகன ஓட்டிகளை அச்சப்படுத்தி வருகிறது. வழக்கமாக அந்த சாலையில் சென்று வருபவர்கள் கூட இரவு நேரங்களில் பள்ளத்தில் விழுந்து காயம் அடைகின்றனர். அதேபோல் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் அந்த இடத்தில் பள்ளம் இருப்பது தெரியாமல் பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்துள்ளனர். அதனால், பெரிய அளவில் விபரீதம் ஏற்படும் முன் சேதமடைந்த தரைப்பாலம் மற்றும் பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.
அடிக்கடி விபத்துகள்
இதுகுறித்து கூத்தாநல்லூரை சேர்ந்த நூர்முகம்மது கூறுகையில், காடுவெட்டி சாலையில் ஏற்பட்ட பள்ளம் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இந்த பள்ளம் ஏற்பட்ட சாலை மிகவும் ஆபத்தான வளைவு என்பதால், வாகனங்களை திருப்புவதே கடினமாக உள்ளது. அப்படி இருக்கும் நிலையில் மிகப்பெரிய அளவில் உள்ள பள்ளத்தை எளிதில் கவனிக்க முடியாத வகையில் உள்ளது. இதனால் இந்த இடம் ஆபத்தான வளைவும், ஆபத்தான பள்ளமும் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடமாக மாறி வருகிறது.
இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் நேரங்களிலும் பள்ளத்தில் பலர் விழுந்து காயம் அடைந்து உள்ளனர். ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் செல்லும் இந்த பிரதான சாலையில் உள்ள பள்ளம், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருவதால் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.