சேதம் அடைந்த நடைபாலத்தை அகற்றி, அகலமான பாலம் கட்ட வேண்டும்
முத்துப்பேட்டை அருகே கோரையாற்றில் சேதம் அடைந்த நடைபாலத்தை அகற்றி விட்டு புதிதாக அகலமான பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தில்லைவிளாகம்:
முத்துப்பேட்டை அருகே கோரையாற்றில் சேதம் அடைந்த நடைபாலத்தை அகற்றி விட்டு புதிதாக அகலமான பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோரையாற்றில் நடைபாலம்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள ஆலங்காடு, உப்பூர், ஜாம்புவானோடை, தில்லைவிளாகம் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் கோரையாற்றின் குறுக்கே மிகப்பழமையான பாலம் ஒன்று உள்ளது.
இந்த பாலம் மிகவும் குறுகலான அளவில் நடைபாலம் போன்று காட்சி அளிக்கிறது. வாகன போக்குவரத்துக்கு உகந்ததாக இல்லை. பாலத்தின் தடுப்புகள் இரும்பு குழாய்கள் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.
இதை ஆலங்காடு, உப்பூர், ஜாம்புவானோடை, தில்லைவிளாகம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாலம் சேதம் அடைந்து காணப்படுகிறது.
மீனவர்கள் கவலை
முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மன்னார்குடி, வேதாரண்யம், திருவாரூர் போன்ற ஊர்களில் படிக்கக்கூடிய பள்ளி மாணவ, மாணவிகள் இந்த பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டி உள்ளது.
பாலத்தின் வழியாக மீனவர்கள் கடலுக்கு எளிதாக செல்ல முடியும். ஆனால் பாலம் மிகவும் குறுகலாக இருப்பதால் மீனவர்கள் தங்களுடைய வாகனங்களில் பாலம் வழியாக செல்ல முடிவதில்லை. இதனால் பல கிலோமீட்டர் தூரம் சுற்றி கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள். இதன் காரணமாக நேரவிரயமும், கூடுதல் பொருட்செலவும் ஆவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
ஊருக்குள் வெள்ளம்
கோரை ஆற்றில் அகலமான பாலம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அகலமான பாலம் கட்டப்பட்டால் வீரன்வயல், வடக்கு வெல்லாதிகாடு, கழுவங்காடு, துறைத்தோப்பு, அறமாங்காடு, செங்கங்காடு, கொள்ளுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் ஆஸ்பத்திரி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கான இடங்களுக்கு விரைவாக செல்வதற்கு வழிவகை ஏற்படும்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், 'கோரை ஆற்றில் உள்ள பாலம் குறுகலாக இருப்பதால், பல கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மழைக்காலங்களில் அதிகமான தண்ணீர் கோரை ஆற்றில் வரும்போது ஆகாயதாமரை மற்றும் புதர் செடிகள் இந்த சிறிய பாலத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, ஆற்றின் கரை உடைபட்டு ஊருக்குள் வெள்ளம் வருகிறது.
புதிய பாலம் கட்ட வேண்டும்
ஆலங்காடு, உப்பூர், ஜாம்புவானோடை, தில்லைவிளாகம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக புதிய அகலமான பாலம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோரை ஆற்றில் புதிதாக அகலமான பாலம் கட்டுவதற்கு வரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.