சேதமடைந்த குழந்தைகள் மையத்தை சீரமைக்க வேண்டும்
களம்பூர் பேரூராட்சி 5-வது வார்டில் சேதமடைந்த குழந்தைகள் மையத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
களம்பூர் பேரூராட்சி 5-வது வார்டில் சேதமடைந்்த குழந்தைகள் மையத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குழந்தைகள் மையம்
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களம்பூர் பேரூராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் குழந்தைகள் மையம் 9 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதில், களம்பூர் 5-வது வார்டில் இஸ்லாமிய பள்ளி அருகாமையில் உள்ள குழந்தைகள் மையத்தில் 20 குழந்தைகள் பயிலுகின்றனர்.
இந்த மையத்தில் மேல்தளம் முழுவதும் சேதம் ஏற்பட்டு, உள்பக்கம் உள்ள கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் இருந்து வருவதால் தினமும் சிமெண்டு உதிரும் நிலை இருந்து வந்தது. இதனையடுத்து குழந்தைகள் மைய பொறுப்பாளர் தஸ்லீம் என்பவர் அருகில் உள்ள வீட்டை வாடகை எடுத்து அங்கேயே சமையல் செய்து குழந்தைகளுக்கு வழங்கி வருகிறார்.
சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து குழந்தைகள் மைய பொறுப்பாளர் கூறுகையில், தற்போது குழந்தைகள் மையம் வாடகை இடத்தில் இயங்கி வருகிறது. அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தின் அருகில் தினமும் 'குடிமகன்'கள் குடித்துவிட்டு மதுபாட்டில்களையும், கவர்களையும் போட்டுவிட்டு செல்கின்றனர். எனவே, சேதமடைந்த குழந்தைகள் மையத்தை சீரமைக்க வேண்டும்' என்றார்.
மேலும் குழந்தைகளின் பெற்றோர்கள் கூறுகையில், 'சேதமடைந்துள்ள குழந்தைகள் மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப பயமாக உள்ளது. எந்த நேரத்தில் இடிந்து விழுமோ என்ற அச்சம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.