சேதமடைந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்

தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர் வலியுறுத்தினார்.

Update: 2022-11-30 18:45 GMT

தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சேதமடைந்த கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர் வலியுறுத்தினார்.

முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டுவார்

மயிலாடுதுறை நகர்சபை கூட்டம் நகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு நகரசபை தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் செல்வகணபதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். இதன் விவரம் வருமாறு:-

ஜெயந்தி (அ.தி.மு.க.) : எனது வார்டில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது.

கணேசன் (ம.தி.மு.க.): புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான டெண்டர் விடப்படும் பணி தொடங்காமல் ஏன் நிறுத்தப்பட்டுள்ளது.

தலைவர்: விரைவில் முதல்-அமைச்சர் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவார். அதன் பின்னர் பணி தொடங்கும்.

கல்யாணிரகு (தி.மு.க.): வார்டுக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் தினமும் அரை மணி நேரம் கூட குடிநீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. அம்பேத்கர் நகரில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது.

ரமேஷ் (தி.மு.க.): பூம்புகார் சாலையில் ஆழ் நுழைவு தொட்டிகளில் இருந்து பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கி நிற்கின்றன. அந்த பகுதியில் 6 இடங்களில் உள்நுழைவுத்தொட்டிகளை உயர்த்தி கட்ட வேண்டும்.

மணிமேகலை (தி.மு.க.) : கொசுத்தொல்லை அதிகமாகி விட்டது. எனது வார்டில் கொசு மருந்து அடிக்க வேண்டும்.

கருத்தடை செய்ய ஏற்பாடு

சர்வோதயன் (தி.மு.க.) : தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சேதமடைந்த கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

சதீஷ்குமார் (அ.தி.மு.க) : மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே வேகத்தடை அமைக்க வேண்டும். மாயூரநாதர் வடக்கு வீதியில் பஸ் நிறுத்தம் அமைக்க வேண்டும்.

ராமச்சந்திரன் (அ.தி.மு.க) : எனது வார்டில் பழுதடைந்த 3 மினி குடிநீர் தொட்டிகளும் சீரமைக்கப்படாமல் உள்ளது.

கார்த்தி (தி.மு.க.) : எனது வார்டில் பன்றி தொல்லையும், நாய்த்தொல்லையும் அதிகமாகி விட்டது.

ஆணையர்: பன்றிகளை பிடிக்க சில பிரச்சினைகள் உள்ளது. அதே சமயம் நாய்கள் பிடித்து கருத்தடை செய்ய உடனே ஏற்பாடு செய்யப்படும்.

செந்தில் (பா.ம.க.):எனது வார்டில் குடிநீரில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழிப்புணர்வு

ஆனந்தி (அ.தி.மு.க) : மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரிக்கப்பட்டு தயாரிக்கப்படும் உரங்கள் நகராட்சி அலுவலகம் முன்பு வைத்து வினியோகம் செய்யலாம். அப்படி செய்தால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்.

ஆணையர்: நல்ல யோசனை. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

முடிவில் நகர சபை துணைத்தலைவர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்