கந்துவட்டி கொடுமையால் தீக்குளிக்க வந்த தம்பதி

ரூ.50 ஆயிரம் கடனுக்கு ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டுகிறார். கந்துவட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தீக்குளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-28 18:14 GMT

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை ஒரு தம்பதியினர், 22 வயதுடைய மகளுடன் வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் சென்றதும், அவர்கள் தாங்கள் பையில் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் கேனை எடுக்க முயன்றனர். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்களது கையில் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கினர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் விருத்தாசலம் அருகே உள்ள கோட்டேரி கிராமத்தை சேர்ந்த ராயப்பன் (வயது 47), அவரது மனைவி வேளாங்கண்ணி (37), இவர்களது மகள் ஆரோக்கிய ஷாலினி (22) என்பது தெரியவந்தது. மேலும், ஆரோக்கிய ஷாலினியின் கல்லூரி படிப்புக்காக ராயப்பன், அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் கடந்த 2018-ம் ஆண்டு வட்டிக்கு ரூ.50 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.

கந்துவட்டி கேட்டு மிரட்டல்

பின்னர் கடந்த ஆண்டு வட்டியுடன் பணத்தை திரும்ப செலுத்த சென்ற போது, அந்த நபர் தனக்கு வட்டியுடன் ரூ.3 லட்சம் தர வேண்டும் என்றும், இல்லையெனில் உங்களது பூர்வீக சொத்தை தனது பெயரில் கிரையம் செய்து கொடுக்கும்படி கேட்டு மிரட்டி வருகிறார். இது தொடர்பாக ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதனால் தான் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள மண்எண்ணெய் கேனுடன் வந்தோம். எனவே கந்துவட்டி கேட்டு மிரட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார் இது தொடர்பாக மனு அளியுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்