பழனி அருகே நள்ளிரவில் வயதான தம்பதியை வெளியே தள்ளி வீடு தீவைத்து எரிப்பு

பழனி அருகே நள்ளிரவில் வயதான தம்பதியை வெளியே தள்ளி வீடு தீவைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-09-27 19:29 GMT

பழனி அருகே பாலசமுத்திரத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இங்கு செல்லமுத்து (வயது 80) என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். தோட்டத்தில் உள்ள குடிசை வீட்டில் செல்லமுத்து, தனது மனைவியுடன் தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வயதான தம்பதியினர் தோட்டத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் தோட்டத்துக்குள் புகுந்த மர்மநபர்கள், வீட்டின் கதவை திறந்து செல்லமுத்து மற்றும் அவரது மனைவியை வெளியே தள்ளினர். பின்னர் வீட்டின் மின் இணைப்பை துண்டித்துவிட்டு, குடிசையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். பின்னர் அங்கிருந்து மர்மநபர்கள் தப்பி ஓடினர்.

இதற்கிடையே வீடு தீப்பிடித்து எரிந்தது குறித்து பழனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படைவீரர்கள், குடிசை வீட்டில் எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது.

இதுகுறித்து தகவல் அறிந்த பழனி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிவசக்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.


Tags:    

மேலும் செய்திகள்