31 பேரிடம் ரூ.10¾ லட்சத்தை மோசடி செய்த தம்பதி

விராலிமலை அருகே பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி 31 பேரிடம் ரூ.10¾ லட்சத்தை மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தில் மனு கொடுக்க திரண்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-26 19:00 GMT

தனியார் நிதி நிறுவனம்

விராலிமலை தாலுகா தேன்கனியூரை சேர்ந்தவர் சின்னப்பா மகன் சுரேஷ் (வயது 33). தனியார் கம்பெனி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்த நெடுஞ்சாலைதுறையில் வேலை பார்க்கும் மலையப்பன் மனைவி தனலெட்சுமி. இவர் மூலம் சுரேஷ் கடந்த 2016-ம் ஆண்டு மதுரையை தலைமையிடமாக கொண்டு விராலிமலையில் இயங்கிவந்த தனியார் நிதி நிறுவனத்தில் 5 வருடத்திற்கு மாதம் ரூ.600 விதம் 3 வருடம் தொடர்ச்சியாக ரூ.23 ஆயிரத்து 400-ஐ செலுத்தி அதற்கான ரசீதையும் பெற்றுள்ளார்.

பணத்தை திருப்பி தருமாறு...

கொரோனா தொற்றின் காரணமாக தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கின் போது அந்த தனியார் நிறுவனம் பணத்தை வசூல் செய்யவில்லை. மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக மாத தவணை தொகையை அந்த நிறுவனம் கேட்கவில்லை என சுரேஷ் நினைத்து சிறிது காலம் இருந்துள்ளார்.

இந்நிலையில் 5 வருடங்கள் ஆகியும் அந்த நிறுவனம் குறித்த எந்த தகவலும் இல்லை என்பதால் சுரேஷ் தான் கட்டிய பணத்தை திரும்ப பெற்று தரும்படி பலமுறை தனலெட்சுமியிடம் கேட்டுள்ளார். இதுகுறித்து தனலெட்சுமி சரிவர பதில் கூறாமல் தனது கணவர் மலையப்பன் மூலம் மிரட்டும் தோரணையில் பேசியதாக கூறப்படுகிறது.

ரூ.10¾ லட்சம்...

இதேபோல் தனலெட்சுமி மூலம் தனியார் நிதி நிறுவனத்தில் அதேபகுதியை சேர்ந்த சின்னப்பன் என்கிற வடமலை ரூ.48 ஆயிரம், குமார் ரூ.48 ஆயிரம், பாலசுப்பிரமணி ரூ.43 ஆயிரம், ஏழுமலை ரூ.14 ஆயிரம், கிருஷ்ணன் ரூ.39 ஆயிரம், கோபால் ரூ.24 ஆயிரம், சண்முகசுந்தரம் ரூ.48 ஆயிரம், செல்லம்மாள் ரூ.24 ஆயிரம், மாரிக்கண்ணு ரூ.48 ஆயிரம், அலெக்ஸ்பாண்டியன் ரூ.24 ஆயிரம் உள்பட 31 பேரிடமிருந்து மொத்தம் ரூ.10 லட்சத்து 75 ஆயிரத்து 200-ஐ முதலீடு செய்துள்ளனர். பணம் கட்டிய 31 பேரும் ஒன்று திரண்டு நேற்று முன்தினம் தனலெட்சுமியிடம் 5 வருடங்கள் முடிந்துள்ளது எங்களது பணத்தை ஏன் திரும்பி தரவில்லை என்று கேட்டுள்ளனர்.

நடவடிக்கை எடுக்கக்கோரி மனு

இதற்கு தனலெட்சுமி சரிவர பதில் கூறவில்லை. இதையடுத்து நேற்று சுரேஷ் உள்பட 31 பேரும் சேர்ந்து விராலிமலை போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் 31 பேரும், எங்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக மோசடி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படும் மலையப்பன் மற்றும் அவரது மனைவி தனலெட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்தனர்.

புகார் மனுவை பெற்றுகொண்டு விசாரணை செய்த போலீசார் மோசடி செய்ததாக கூறப்படும் தொகையானது ரூ.10 லட்சத்திற்கும் மேல் உள்ளதால் இதனை புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு பரிந்துரை செய்துள்ளனர். விராலிமலை போலீஸ் நிலையத்தில் 31 பேர் திரண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்