மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தனர்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் சமுதாய கூடத்தில் மின்சார துறையில் மின்உற்பத்தி மற்றும் விநியோகத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் இருந்து பணி நிரந்தரம் செய்வதற்கான கோரிக்கை மனுக்களை வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக ஒருங்கிணைப்பாளர்கள் ஏழுமலை, பாலச்சந்திரன், மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு தொழிலாளர்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர்.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை கூறுகையில், மின்வாரியத்தில், மின்கம்பம் நடுதல், கேபிள் பதித்தல், மின்சாதன பழுதுகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளில், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,200 பேர் பணியாற்றுகின்றனர். ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு, தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், மின்வாரியம் கண்டுகொள்ளாமல் உள்ளது.
மேலும் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிவோருக்கு, மின்வாரியம் நிர்ணயித்துள்ள தினசரி, ரூ.380 கூலியை நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் முதல்-அமைச்சர் மற்றும் மின்சார துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றார்.
நிகழ்ச்சியில் ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.