திருச்செந்தூர் அமலிநகரில் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்

திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று கலெக்டர் தலைமையில் நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்ற மீனவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் கடலில் மீன்பிடிக்க செல்கின்றனர்.

Update: 2023-02-23 18:45 GMT

திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று கலெக்டர் தலைமையில் நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்ற மீனவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் கடலில் மீன்பிடிக்க செல்கின்றனர்.

காலவரையற்ற வேலைநிறுத்தம்

திருச்செந்தூர் அமலிநகர் கடற்கரையில் அடிக்கடி கடல் அரிப்பு ஏற்படுவதால் மீனவர்களின் வீடுகள், வலைபின்னும் கூடங்கள் சேதமடைந்தன. மேலும் கடற்கரையில் நாட்டு படகுகளை நிறுத்தவும், கடலுக்கு செல்லவும் மீனவர்கள் சிரமப்படுகின்றனர்.

இதையடுத்து மீனவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் மீன்வளத்துறை மானிய கோரிக்கையின்போது திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஓராண்டாகியும் இன்னும் எந்த பணிகளும் தொடங்கப்படவில்லை.

எனவே அமலிநகரில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வலியுறுத்தி, கடந்த 20-ந்தேதியில் இருந்து மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 4-வது நாளாக நேற்று மீனவர்கள் குடும்பத்தினருடன் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.

சமாதான பேச்சுவார்த்தை

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.

திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர், உதவி இயக்குனர் விஜயராகவன், அமலிநகர் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம், ஊர்கமிட்டி தலைவர் பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சுமுக தீர்வு ஏற்பட்டது. இதையடுத்து மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

இதுதொடர்பாக கலெக்டர் செந்தில்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

விரைவில் தூண்டில் வளைவு பாலம்

அமலிநகரில் தூண்டில் பாலம் அமைக்க சட்டமன்றத்தில் மீன்வளத்துறை மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் கடலோர மண்டல மேலாண்மை திட்டம் வகுத்த பிறகே கடலில் நிரந்தர அமைப்பு எதையும் ஏற்படுத்த வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்து உள்ளது. இதனால் பணிகளில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

தமிழக அரசு சார்பில் கடலோர மண்டல மேலாண்மை திட்டம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அந்த பணிகள் முடிவடைந்ததும், அமலிநகரில் தூண்டில் பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படும். அமலிநகரில் நிச்சயமாக தூண்டில் பாலம் அமைக்கப்படும் என்ற விவரம் மீனவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்று, இன்று (வெள்ளிக்கிழமை) கடலுக்கு செல்ல மீனவர்கள் சம்மதித்து உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்