தடுப்புச்சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

கோத்தகிரி-கன்னேரிமுக்கு சாலையில் மண்சரிவு ஏற்படுவதை தடுக்க, தடுப்புச்சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-07-12 14:12 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி-கன்னேரிமுக்கு சாலையில் மண்சரிவு ஏற்படுவதை தடுக்க, தடுப்புச்சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சாலை விரிவாக்கம்

கோத்தகிரி நெடுஞ்சாலை துறை சார்பில், சாலைகள் மற்றும் குறுகிய வளைவுகளை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. மண்சரிவு ஏற்படுவதை தவிர்க்க சாலையோர தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் மழைநீர் கால்வாய்கள், சாலைகளை புதுப்பிப்பது, பாலங்கள் பழுது பார்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ரூ.1 கோடியே 70 லட்சம் செலவில் கோத்தகிரியில் இருந்து கன்னேரிமுக்கு கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள குறுகிய வளைவை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. அங்கு தடுப்புச்சுவர் கட்டுவது, அடிக்கடி மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இதில் விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நிறைவடைந்தது.

மண்சரிவு ஏற்படும் அபாயம்

கோத்தகிரி-கன்னேரிமுக்கு சாலையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தடுப்புச்சுவர் கட்டுவதற்காக கடந்த 2 மாதங்களுக்கு முன் பொக்லைன் எந்திரம் மூலம் மண் திட்டுகள் அகற்றப்பட்டது. இருப்பினும், இதுவரை தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடங்கவில்லை. இந்தநிலையில் தற்போது பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. பலத்த மழை காரணமாக மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

அங்கு மண் திட்டு இடிந்து விழுந்தால் தார்ச்சாலை சேதமடைவதுடன், கன்னேரிமுக்கு செல்லும் சாலை துண்டிக்கப்படும் அபாயம் காணப்படுகிறது. மேலும் இந்த சாலை வழியாக பல்வேறு கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வரும் அரசு மற்றும் மினி பஸ்கள், தனியார் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே, பேரிடர் ஏற்படுவதற்கு முன் தடுப்புச்சுவரை விரைந்து கட்டி முடிக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்