தரைப்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

ும்பகோணம் பிடாரிகுளம் சாலையில் தரைப்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-11 19:47 GMT

கும்பகோணம்:

கும்பகோணம் பிடாரிகுளம் சாலையில் தரைப்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை விரிவாக்க பணி

கும்பகோணம் பிடாரிகுளம் பகுதியில் திருவிடைமருதூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஆஸ்பத்திரி, பள்ளி மற்றும் ஏராளமான கடைகள் உள்ளன. இதன்காரணமாக சாலையில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.

தற்போது கும்பகோணத்தில் நெடுஞ்சாலைதுறை மூலம் செயல்திறன் அடிப்படையிலான பராமாரிப்பு திட்டத்தின் கீழ் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. பிடாரிகுளம் பகுதி சாலையிலும் விரிவாக்க பணிகள் தொடக்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்தது.

தரைப்பாலம்

இந்த நிலையில் வாய்க்கால் நீர் செல்வதற்கு வசதியாக மேற்கண்ட சாலையின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு, இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த சில வாரங்களாக தரைப்பால கட்டுமான பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

மேலும், தரைப்பால பணிகள் நடப்பதை தொடர்ந்து அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆஸ்பத்திரிக்கு அவசர சிகிச்சைக்காக வருபவர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையில் நடந்து வரும் தரைப்பால பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்